பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று, கடந்த மாதம் ஆறு வயது சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த இம்ரான் அலி எனும் 24 வயது நபருக்கு நான்கு மரண தண்டனைகளை வழங்கியுள்ளது.
கடந்த ஜனவரி 9 அன்று லாகூரின் தெற்கே உள்ள கசூர் நகரில் ஜைனப் அன்சாரி எனும் சிறுமியின் உடல் குப்பைகளுக்கு மத்தியில் கண்டெடுக்கப்பட்டது.
அதே மாதம் 23ஆம் தேதி அலி கைது செய்யப்பட்டார்.
ஆள் கடத்தல், பாலியல் வல்லுறவு, கொலை மற்றும் தீவிரவாதச் செயலில் ஈடுபட்டது ஆகிய நான்கு குற்றங்களுக்காக இம்ரான் அலிக்கு தலா ஒரு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
முறையற்ற புணர்ச்சியில் ஈடுபட்டதற்காக ஒரு ஆயுள் தணடனையும் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
அச்சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டது பாகிஸ்தான் முழுவதும் பெரும் போராட்டங்களைத் தூண்டியது. அந்தப் போராட்டங்களின்போது ஏற்பட்ட கலவரங்களில் இருவர் உயிரிழந்தனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, ஜைனப்பின் தந்தையும் நீதிமன்றத்தில் இருந்தார்.
ஜைனப் மட்டுமல்லாது, இதற்கு முன்பு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக அந்த நகரில் பல சிறுமிகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட குற்றச்சம்பவங்களிலும் இம்ரான் அலிக்கு தொடர்பு இருப்பதாக பஞ்சாப் மாநில காவல் அதிகாரிகளும் முதலமைச்சரும் தெரிவித்திருந்தனர்.
இம்ரான் அலி மீதான பிற வழக்குகளிலும் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று அரசு வழக்கறிஞர் எதிஷாம் காதிர் ஷா ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
டஜன் கணக்கானவர்கள் சாட்சி அளித்த ஜைனப் கொலை வழக்கில், டி.என்.ஏ பரிசோதனை மற்றும் உண்மை கண்டறியும் சோதனை ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டன.
அலி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டபின், அவரது வழக்கறிஞர் இந்த வழக்கில் இருந்து விலகிக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் மேல் முறையீடு செய்ய 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஜைனப்பின் உடல் கண்டெடுக்கப்படும் வரை, அவர் காணாமல் போன 5 நாட்களாக தாங்கள் அளித்த புகார் மீது காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜைனப் கடத்தப்படும் காட்சிகள் பதிவான கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஜைனப்பின் உறவினர்களே சேகரித்து காவல் துறைக்கு வழங்கினர்.