ஹைதராபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பெண் கைதியை போலீஸ் கமிஷ்னர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நிகழும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் 3 பெண்களை கைது செய்து விசாரித்து வந்தனர். இதனையடுத்து திருட்டுச் சம்பவம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, உதவி ஆணையர் ரங்கா ராவ் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் தான் தவறு செய்யவில்லை என்றும், தன் போது பொய் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த ஆணையர் ரங்கா ராவ் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அந்தப் பெண்ணை கன்னத்தில் அறைந்தார். இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் தற்போது வெளியாகியுள்ளது. பெண்ணை கன்னத்தில் அறைந்த உதவி ஆணையருக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதனிடையே, ரங்கா ராவ் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஹைதராபாத் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் அவரை வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.