அவுஸ்திரேலிய சிறைகளில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்படும் செய்திகளை Human Rights Watch என்னும் அமைப்பு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
ஏற்கனவே மன நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மீண்டும் தனிமைச் சிறைகளில் அடைக்கப்படுவதால் அவர்கள் நிலைமை இன்னும் மோசமடைகிரது.
மன நலம் குறித்த போதுமான அறிவு இல்லாத சிறைக் காவலர்களோ கைதிகள் கீழ்ப்படிய மறுப்பதாக தவறாகப் புரிந்துகொண்டு மேலும் அவர்களைத் தண்டிக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க, உடல் குறைபாடுகள் கொண்டவர்களின் நிலைமை இன்னும் மோசம். அவர்களில் பாதிப்பேர் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்படுகிறார்கள்.
நடந்ததை வெளியே சொல்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள்.
இந்த சிறைகளில் வருடக்கணக்காக கற்பழிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்னும் விடயம் Human Rights Watch விசாரித்ததன் பிறகுதான் தெரியவந்துள்ளது.
உடல் குறைபாடுகள் கொண்டவர்களை உடன் கைதிகளும் பல நேரங்களில் சிறைக் காவலர்களும்கூட பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்.
அது மட்டுமின்றி கைதிகளின் மேற்பார்வையாளர்களாக உடன் கைதிகளே நியமிக்கப்படுகிறார்கள்.
அவர்களில் பெரும்பாலானோர் பாலியல் குற்றங்களுக்காக சிறைக்கு வந்தவர்கள் என்னும் உண்மை திடுக்கிட வைக்கிறது.
மன நலப் பிரச்சினை கொண்ட எனக்கு உதவி தேவைப்படுகிறது. ஆனால் உதவி அளிக்கப்படுவதற்குப் பதிலாக நான் தண்டிக்கப்பட்டேன் என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத கைதி ஒருவர்.
மன நலம் பாதிக்கபட்ட மேரி என்னும் ஒரு பெண் தனியறையில் 28 நாட்கள் அடைக்கப்பட்டார். அப்போது அவரை சிறை அதிகாரிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார்கள்.
பின்னர் அவருக்கு உடற்பயிற்சி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கைகளில் விலங்கும் சங்கிலியும் பொருத்தப்பட்டவாறே அவர் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்பட்டார்.
அவர் உடற்பயிற்சி செய்யும்போது அதிகாரிகள் அவரை கேவலமாக பேசியிருக்கிறார்கள். நாய் போல நடக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு கழிப்பறை உபயோகம்கூட அவருக்கு அனுமதிக்கப்படவில்லை. ஒரு அட்டைப் பெட்டியில் மலம் கழிக்க கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்.
Human Rights Watch அறிக்கை அளிக்கப்பட்டபின் Sen. Rachel Siewert, இதுபோன்ற அத்துமீறல்கள் ஏற்கனவே எங்கள் காதுகளை எட்டியுள்ளன. இதற்காக ஒரு கமிஷன் ஏற்படுத்தப்பட்டு சீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
Sen. Jordon Steele-John, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். “அரசாங்கம் ஒரு கமிஷனை அமைத்து அறிக்கை பெறுவதற்குமுன் இன்னும் எத்தனை பாலியல் பலாத்காரங்கள், வன்முறைகள் மற்றும் மெத்தனப் போக்குகளைக் குறித்து நாம் கேள்விப்படப் போகிறோம்?” என்று கேள்வி எழுப்பிய அவர் “நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும்போதே இந்த நாட்டில் இத்தகைய அகோரச் சம்பவங்கள் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
நடவடிக்கையில் ஈடுபட இந்த அரசாங்கம் மறுப்பதால் குறைபாடுகள் கொண்ட பலர் தொடர்ந்து துன்புறுத்தல்களுக்குள்ளாக்கத்தான் படுவார்கள்” என்கிறார் அவர்.