மைத்திரி, ஒருபுறம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுசில் பிரேமஜயந்தவை தூண்டி வருவதுடன் மறுபுறம் ஐ.தே.கவுடன் நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார்.
இப்படியான இரட்டை விளையாட்டில் மகிந்த ராஜபக்ச சிக்க மாட்டார் எனவும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த சூழ்ச்சி காரணமாகவே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தை அமைக்க நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை திரட்டும் சத்தியக் கடிதத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் கையெழுத்திடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கைகள் சீர்குலைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே கூட்டு எதிர்க்கட்சியின் இந்த முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தை அமைக்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ள இந்த நாடாளுமன்ற உறுப்பினர், சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க, துமிந்த திஸாநாயக்க, விஜித் விஜயமுனி சொய்சா, ஏ.எச்.எம்.பௌசி உட்பட ஜனாதிபதிக்கு ஆதரவான அமைச்சர்கள், நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமர் பதவியில் நியமிப்பது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று அலரி மாளிகையில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
நாளைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ளதால், தற்போது காணப்படும் அரசியல் நிலைமையில் அடுத்த சில தினங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட உள்ளது.