கொல்ல முயன்றது ஏன்? வாலிபனின் திடுக்கிடும் வாக்குமூலம்..

தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மதுரையின் திருமங்கலம் அருகே நடுவக்கோட்டையை சேர்ந்தவர் மணிப்பாண்டி, இவரது மகள் சித்ராதேவி, 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல காத்திருந்த சித்ராதேவி மீது வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு சென்றுள்ளார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் சித்ராதேவியை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொலிசார் நடத்திய விசாரணையில், ஒருதலைக்காதலால் இச்சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.

சித்ராதேவியின் ஊரை சேர்ந்த வாலிபர் பாலமுருகன்(வயது 26), தனது காதலை சித்ராதேவி ஏற்காததால் இவ்வாறு செய்தது தெரியவந்தது.

கொலை மிரட்டல், தற்கொலை மிரட்டல் என பலவழிகளில் முயன்றும் சித்ராதேவி பாலமுருகனின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

தன் பெற்றோரிடம் கூறியதுடன், அனைத்து மகளிர் பொலிசிலும் புகார் செய்திருந்தார், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவும் செய்தனர்.

எனவே சித்ராதேவியை பழிவாங்கும் நோக்கில் கொல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் தப்பியோடிய பாலமுருகனை பொலிசார் வலைவீசி தேடி வந்த நிலையில், காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்தவரை கைது செய்தனர்.

பொலிசிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், சித்ராதேவி எனது உறவினர், அவரை காதலித்தேன்.

என்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளவில்லை, எப்படியாவது திருமணம் செய்து கொள்ள நினைத்து கடந்த செப்டம்பரில் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றேன்.

பொலிசில் புகார் அளித்ததால் பயந்து போய், அதிலிருந்து தப்பிக்க சித்ராதேவியை செல்போனில் படமெடுத்தேன்.

அதைபார்த்த அவர் என்னை அறைந்துவிட்டார், அப்போதே கொலை செய்ய வேண்டும் என எண்ணினேன்.

சரியான நேரத்திற்காக காத்திருந்த போது தான், அன்றைய தினம் தோழிகளுடன் வந்த சித்ராதேவியை மடக்கினேன்.

கத்தியை காட்டி மிரட்டியதால் மற்றவர்கள் பயந்து ஓடிவிட்டனர், கத்தியை கழுத்தில் வைத்து அழுத்திக்கொண்டே பெட்ரோல் ஊற்றி தீ மூட்டினேன், இதனால் என் கையிலும் தீக்காயம் ஏற்பட்டது.

பேருந்தில் ஏறி புதுப்பட்டி வந்த என்னை பொலிசார் கைது செய்தனர் என தெரிவித்துள்ளார்.