பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ்-ன் பேச்சு!

இந்திய பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டதால் தான் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்தேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளதால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடுவது தொடர்பாக தேனியில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் எம்எல்ஏ-க்கள் உட்பட அதிமுகவின் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், நான் கட்சி பணிக்கு வரும் போது டிடிவி தினகரன் எல்கேஜி படித்துக் கொண்டிருந்தார்.

சசிகலா குரூப் எனக்கு கொடுத்த அழுத்தத்திற்கு வேறு யாராவது இருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் அல்லது கட்சியை விட்டே சென்றிருப்பார்கள்.

அணிகள் இணைவதற்கு முன்பு பிரதமரை சென்று சந்தித்தேன், அவர் கேட்டுக்கொண்டதால் தான் பழனிச்சாமி அணியுடன் இணைந்தேன்.

அரசின் பொறுப்பை கூட வேண்டாம் என்று தான் கூறினேன், ஆனால் மோடி நான் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என விருப்பப்பட்டதால் தான் துணை முதலமைச்சரானேன் என தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்ன் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, இரு அணிகள் இணைந்த போது பாஜக பின்புறம் இருப்பதாக கூறப்பட்டது.

ஓபிஎஸ்-ன் இந்த பேச்சு அதை உறுதிப்படுத்தும் விதமாக இருப்பதால் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.