மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள் – சம்பந்தன்

2015 அதிபர் தேர்தலின் போது, பெற்றுக் கொண்ட மக்களின் ஆணையை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை அடுத்து,  நேற்றுமுன்தினம் மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இரா.சம்பந்தன் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போதே அவர், 2015 அதிபர் தேர்தலின் போது, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கோரியுள்ளார்.

இந்தச் சந்திப்புக் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் கருத்து வெளியிடுகையில்,

“2020 வரை, தற்போதைய கூட்டு அரசாங்கம் தொடர வேண்டும் என்பதே எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தாக இருந்தது.

எனினும், கடந்த அதிபர் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை சிறிலங்கா அதிபருக்கு அவர் நினைவுபடுத்தினார்.

புதிய அரசாங்கம் பதவியேற்றாலும் கூட சிறிலங்கா அதிபர் தனது பதவிக்காலத்தில், மக்களின் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.” என்று கூறினார்.

மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவவுக்குப் புறப்பட முன்னர், அதிபரின் வதிவிடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.