நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை பலத்தை பெறாத இடங்களில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க தயாராக உள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் தமிழ் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகளை கிழக்கு தமிழர் ஒன்றியம் சந்தித்து வருகின்றது.
அந்த வகையில் இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரை சந்தித்து பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
முதல் கட்டமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளில் அங்குள்ள தமிழ் கட்சிகளை இணைத்து ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் சகலவிதமான விட்டுக் கொடுப்புக்களையும் செய்ய தயாராக உள்ளோம்.
நாம் ஒருபோதும் சிங்கள பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க தயாராக இல்லை. கிழக்கில் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்தே ஆட்சி அமைக்க வேண்டும்.
ஏற்கனவே நாங்கள் தெரிவித்ததன் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு நாம் சகல விதமான விட்டுக் கொடுப்புக்களையும் செய்ய தயார்.
முதலில் உள்ளூராட்சி சபைகளில் தமிழர்களின் ஆட்சி மலர்ந்ததன் பின்னர் ஏனைய விடயங்கள் பற்றி பேசுவதற்கும் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராக உள்ளோம்.
உடனடி தேவையாக உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு கிழக்கு தமிழர் ஒன்றியம் ஏற்பாடு செய்யும் பொது இடம் ஒன்றில் பேசுவதற்கு தயாராக உள்ளோம்.
அவர்களையும் அழைத்து வாருங்கள் ஒன்றாக இருந்து திறந்த மனதுடன் பேசுவோம் என மேலும் தெரிவித்துள்ளார்.