பிரமாண்ட விடுதலை மாநாடு! – அழைப்பு விடுக்கும் திருமுருகன் காந்தி

வெல்லும் தமிழீழம்

மிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் “வெல்லும் தமிழீழம்” என்ற பெயரில் பிரமாண்டமாக மே17 இயக்கத்தால் இன்று (18-02-2018) நடத்தப்பட்டு வருகிறது.

வெல்லும் தமிழீழம்

தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் விரிவாதிக்கக் கொள்கையும், தமிழீழ விடுதலையின் முக்கியத்துவமும். முற்போக்கு ஜனநாயக அரசியலை வென்றெடுத்த தமிழீழ அரசியல் சாசனம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சமூகநீதியும், தமிழ்நாட்டின் எதிர்வினையும், தமிழீழ விடுதலைக்கான  அரசியல் நகர்வுகளும், நம்  உடனடி கடமைகளும். என்ற தலைப்புகளில் நான்கு கட்ட அமர்வுகளாக மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டை மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி துவக்கி வைத்தார். தமிழீழம் அமைய வேண்டி உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி இந்த மாநாடு துவங்கப்பட்டது. மேலும் கவிஞர் காசி ஆனந்தன், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, தமிழ்த்தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், இயக்குநர் அமீர், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன் ஆகியோர் கலந்துகொண்டு தமிழீழ விடுதலை பற்றி உரையாற்றினார்கள். மேலும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெஹலான் பாகவி, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் மாலை அமர்வுகளில் பேசவிருக்கின்றனர்.

வெல்லும் தமிழீழம்

“தமிழீழ விடுதலையை நேசிக்கும் அனைத்து இயக்கங்களும், கட்சிகளும், மேலும் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலையை நேசிக்கும் அனைத்துத் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்று பேசவுள்ளனர். ‘வெல்லும் தமிழீழம்’ என்ற மாநாடானது தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு. அதனால் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும்.” என மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.