நாடு முற்றிலும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று நாட்டின் தற்போதைய அரசியல் பின்னணி குறித்து கேள்வி எழுப்பிய போது பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்து ஒரு வார காலம் கடந்துள்ள நிலையிலும், இன்னும் கயிறு இழுக்கப்பட்டு வருகின்றது.
நாட்டு மக்கள் என்ன நேர்கின்றது என்பதனை அவதானித்து வருகின்றனர். நாட்டில் இன்று அரசாங்கமொன்று உள்ளதா என்பதே தெரியவில்லை.
பிரதமர் பதவி பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. இவர்கள் உண்மையில் என்ன செய்கின்றார்கள்.
சட்ட மூலங்கள் அமுலாக்கப்பட்டுள்ள விதத்தில் குறைபாடுகள் காணப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சம்பளத்திற்கு வேலை செய்யாது அதனை கௌரவ சேவையாகக் கருதி செயற்படுமாறு உறுப்பினர்களிடம் அரசாங்கம் கோரியுள்ளது.
அவ்வாறு செய்வதென்றால் அமைச்சரவை அமைச்சர்களும் சம்பளம் இன்றி கௌரவ சேவையாற்ற வேண்டுமென உள்ளூராட்சி மன்ற ஒன்றியம் கோரியுள்ளது. அவர்கள் கூறுவதிலும் உண்மையில்லாமலில்லை.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் வெறும் பேச்சில் மட்டுமேயாகும். அனைத்து பக்கங்களிலும் அடிபடுவது அப்பாவி மக்கள் மட்டுமே என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.