சட்டம் ஒழுங்கு அமைச்சை என்னிடம் ஒப்படைத்தால் 6 மாதங் களில் குற்றவாளிகளை தண்டித்து உரிய பெறுபேறுகளை நாட்டிற்கு காண்பிப்பேன் என பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
அத்துடன் மக்களினால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்ற யோசனையை நான் வன்மையாக எதிர்க்கின்றேன். ஏனெனில் அவரின் கையோங்கினால் அராஜக நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிட்டகோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
தேசிய அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம். எனினும் கருத்து வேறுபாடுகள் உடையோரும் உள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை.
சுதந்திரக் கட்சியினர் சற்று பின்நகர்ந்து செயற்பாட்டில் உள்ளனர். எனினும் ஜனாதிபதியுடன் பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு அரசாங்கம் முன்செல்லும்.
இதன்படி தற்போது ஒரு வாரமாக இழுபறி நிலையில் காணப்படும் அரசாங்கத்தில் உள்ள நெருக்கடிகளைத் தீர்த்துக்கொண்டு நாம் முன்செல்ல தயாராகி விட்டோம்.
அத்துடன் சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஊடாக முன்னைய காலங்களில் உரிய முறையில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனினும் சட்டம் ஒழுங்கு அமைச்சை என்னிடம் ஒப்படைத்தால் 6 மாதங்களுக்குள் குற்றவாளிகளை தண்டித்து பெறுபேறுகளை நாட்டுக்கு காண்பிப்பேன்.
இதேவேளை மக்களினால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்ற யோசனையை நான் வன்மையாக எதிர்க்கின்றேன்.
ஏனெனில் அவரின் கையோங்கினால் ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்பு இருந்த வெள்ளை வேன் கடத்தல் போன்ற அராஜக நிலைமைகள் மீண்டும் நாட்டில் ஏற்படும்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சியும் பலமாக இருக்க வேண்டும். இது ஜனநாயக பண்பாகும்.
அரசாங்கம் தன்னுடைய செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுக்காமையினால் சிறந்த பாடமொன்றை மக்கள் தமது வாக்குரிமையின் ஊடாக வழங்கியுள்ளனர். ஆகவே குறித்த தவறுகளை திருத்திக்கொண்டு அரசாங்கம் முன்செல்ல வேண்டும்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் என்பதனால் மஹிந்த ராஜபக் ஷவின் பலம் அதிகரித்தமை எமக்கு பிரச்சினையில்லை என்றார்.