ஒரு துளிக்கு இவ்வளவு போராட்டமா? அறிவியல் ஆய்வு!

யாருடனாவது ஏதாவதொரு விஷயத்தில் வாக்குவாதம் வந்தால், நாம் கூறிய கூற்றை நிரூபிக்க சில முயற்சிகளில் இறங்குவோம், அதை நிரூபிப்பதற்கு சில மணி நேரம் காத்திருப்போம். அதன் பிறகும் முடிவு தெரியவில்லை என்றால் ’அடப்போங்கய்யா..’ எனச் சென்று விடுவோம். ஆனால், தாமஸ் பார்னல் (Thomas Parnell) அப்படி விட்டுச் செல்லவில்லை. 1927-ம் ஆண்டு அவர் தொடங்கி வைத்த ஆராய்ச்சி இன்றுவரை சிறிது நேரம்கூட நிற்காமல் நடந்துகொண்டிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

தாமஸ் பார்னல் ஆங்கில இயற்பியல் பேராசிரியர். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இவர் ஒரு கூற்றைக் கூறினார். ’தார் அல்லது டர்பன்டைனில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பிட்ச் என்னும் பொருளானது பார்ப்பதற்கு திடப்பொருள்போல இருந்தாலும் அது பிசுபிசுப்புத் தன்மையுடன் கூடிய ஓர் அரை திரவம்’ என்றார்.

அதை நிரூபிப்பதற்காக 1928-ம் ஆண்டு ஓர் ஆய்வை மேற்கொண்டார். அவர்  கொஞ்சம் சூடேற்றப்பட்ட பிட்ச்-ஐ(pitch) ஒரு கண்ணாடிப் புனலில் வைத்துவிட்டு மூன்று வருடங்கள் அறை வெப்பத்தில் (room temperature) அரை திரவ நிலையை அடையும் வரை காத்திருந்து பின்னர் அந்தக் கண்ணாடிப் புனலின் முனையை உடைத்து அந்தத் திரவம் அந்தச் சின்ன முனையின் வழியே கீழே ஒரு கண்ணாடிக் குடுவையில் விழுமாறு செய்துவிட்டு அதனை ஒரு கண்ணாடிக் குவிமாடம் கொண்டு மூடிவிட்டார். சரியாக எட்டு வருடம் கழித்து 1938-ம் ஆண்டு அந்தப் பிட்சின் முதல் துளி கீழே இருந்த கண்ணாடிக் குடுவையில் விழுந்தது. பின்னரும் அந்த ஆய்வு தொடரப்பட்டது. அதன் இரண்டாவது துளி 1947-ம் ஆண்டு விழுந்தது. அதன் பிறகு ஒரு வருடத்தில் பார்னல் இறந்தும் போனார். ஆனால், அந்த ஆராய்ச்சி மட்டும் தடைபடவே இல்லை. இந்த ஆராய்ச்சி பெரும் வெற்றி பெற்று பிட்ச் என்பது திரவம்தான் என நிரூபிக்கப்பட்டது. ஆனால், இதன் பாகுத்தன்மையானது (viscosity) தண்ணீரை விட 230 பில்லியன் மடங்கு (2.3×10^11) அதிகம் எனக் கண்டறியப்பட்டது.

பார்னல்லின் மறைவுக்குப் பின் இதனைப் பாதுகாக்கும் உரிமை மட்டும் மாறிக்கொண்டே வருகிறது. இந்த ஆராய்ச்சிக்காகப் பேராசிரியர் தாமஸ் பார்னெல்லுக்கும், தற்போதைக்கு முந்தைய பாதுகாவலராக இருந்த ஜான் மெயின்ஸ்டன்னுக்கும் 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ‘ஐஜி நோபல் பரிசு’ (Ig nobel prize) வழங்கப்பட்டது. இந்த ஆராய்ச்சியானது உலகிலேயே மிக நீண்டு இயங்கும் ஆய்வகப் பரிசோதனைக்கான கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்டையும் பெற்றது. மெயின்ஸ்ட்டன் 23 ஆகஸ்ட் 2013-ல் இறந்துவிட, இதன் தற்போதைய பாதுகாவலராக பேராசிரியர் ஆண்டிரியூ ஒயிட் என்பவர் இருக்கிறார்.

தாமஸ் பார்னல்

இந்த ஆய்வு தொடங்கியது முதல் இன்று வரை இந்த 90 வருடத்தில் மொத்தம் ஒன்பது துளிகள் மட்டுமே விழந்துள்ளன. எனினும் அந்தத் துளிகள் கீழே இருக்கும் கண்ணாடிக் குடுவையில் விழும் அந்தக் காட்சியினை எவரும் கண்டதில்லை. எனவே, ஆராய்ச்சியாளர்கள் 2000- வது ஆண்டு லைவ் ஸ்ட்ரீம் வெப்கேம் ஒன்று அமைத்து எட்டாவது துளி விழுவதைக் காட்சிப்படுத்த முயன்றனர். ஆனால், சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எட்டாவது துளி விழுவதைக் காட்சிப்படுத்த முடியவில்லை. 2014-ம் ஆண்டு குடுவை மாற்றும்போது ஏற்பட்ட அசைவினால் இதன் ஒன்பதாவது துளி தவறுதலாக விழுந்துவிட்டது. எனவே, அதைக் கணக்கில் கொள்ளாமல் பத்தாவது துளிக்காக வெயிட்டிங்கில் உள்ளனர். இதன் பத்தாவது துளி 2028-ம் ஆண்டு விழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதே நிலையில் தொடர விட்டால் இந்த பிட்ச் இன்னும் நூறு ஆண்டுகள் வரைகூட துளித்துளியாக விழுந்துகொண்டே இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான அறிவியல் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பலர், விழும் அந்த ஒரு துளியினைப் பார்ப்பதற்காக லைவ் ஸ்ட்ரீமை நோக்கிய வண்ணம் உள்ளனர்.

சிறுதுளி பெரு வெள்ளம் என்பார்கள். ஆனால், இங்கு ஒரு துளிக்கு இந்தப் பாடு!