ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறியது!

தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெளியேற போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மகிந்த அமரவீர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நேற்று இரவு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2015ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்து தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், தற்போது தேசிய அரசாங்கம் முற்றிலும் உடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்ளூராட்சி தேர்தல் முடிவடைந்த பின்னர் கொழும்பு அரசியலில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். எனினும், இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.நேற்று இரவு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன் போதும் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், இன்று பிற்பகல் 12.30 மணியளவில், தன்னை சந்திக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.