தமிழகத்தையே அதிரவைத்த கொலை வழக்கின் தீர்ப்பு!

தமிழகத்தை அதிர வைத்த ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

ஆள்கடத்தல், பலாத்காரம், கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில், தஷ்வந்த் குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம் தஷ்வந்திற்கு மரண தண்டனையும், 46 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்துள்ளது.

அதாவது ஆள்கடத்தலுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, பாலியல் வன்கொடுமைக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மானபங்கம் குற்றத்திற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தடயங்களை மறைக்க முயன்றதற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

போஸ்கோ சட்டத்தின்கீழ் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 46 ஆண்டுகள் சிறை மற்றும் மரண தண்டனை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் கதறிய தந்தை
முதல் இணைப்பு- ஹாசினி கொலைவழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த மென்பொறியாளர் தஷ்வந்த், மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தனது பக்கத்து வீட்டை சேர்ந்த ஹாசினி எனும் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுள்ளார்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பொலிசார் தஷ்வந்தை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த், கடந்த டிசம்பர் 2ஆம் திகதி தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு, அவரின் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளார்.

மும்பையில் பதுங்கியிருந்த அவரை, தனிப்படை பொலிசார் கைது செய்து அழைத்துச் சென்ற போது, விமான நிலையத்தில் இருந்து தப்பித்துள்ளார்.

பின்னர், மும்பை பொலிசாரின் உதவியுடன் தஷ்வந்தை கைது செய்த பொலிசார், அவரை புழல் சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிபதியிடம் தனக்கு தண்டனை அளிக்குமாறு கோரிய தஷ்வந்த், பின்னர் தான் கொலை செய்யவில்லை என்று கூறினார்.

இந்த வழக்கின் தீர்ப்பு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று வழங்கப்படுகிறது. தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி வேல்முருகன் அளிக்க உள்ளார்.