அங்கீகாரம் இல்லாத தேசிய அரசாங்கத்தில் பிரதமர் நாற்காலியில் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சி ஆசனத்தில் சம்பந்தனும் அமர முடியாது.
ஆகவே உடனடியாக பிரதமர் இராஜினாமா செய்யவும், சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக் ஷவை எதிக்கட்சி தலைவராக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தனி அரசாங்கத்தின் அமைச்சரவை உருவானால் மாத்திரமே அடுத்தகட்ட விவாதத்தை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற வரைவு நிலையியற் கட்டளைகள் தொடர்பிலான விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேலையில் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றினை எழுப்பி உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்த அரசாங்கம் கொண்டுவந்த 19 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலமாக தேசிய அரசாங்கமாக இருக்கும் ஆட்சியில் 45 அமைச்சுக்கள் எனவும் தனி அரசாங்கத்தில் 30 அமைச்சுக்கள் என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இப்போது தேசிய அரசாங்கம் இல்லாத நிலையில் அமைச்சுக்கள், பிரதி அமைச்சுக்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
ஆகவே உடனடியாக அரசாங்கமாக புதிய அமைச்சுப்பதவிகளை ஏற்றுவிட்டு அடுத்த கட்ட விவாதங்களை செய்ய வேண்டும். தேசிய அரசாங்கத்தை நாம் இனியும் ஏற்றுகொள்ள முடியாது.
அவ்வாறான நிலையில் அங்கீகாரம் இல்லாத அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்க இனியும் பிரதமர் நாற்காலியில் அமர முடியாது, அதற்கான அங்கீகாரம் அவருக்கு இல்லை, அதேபோல் சம்பந்தன் தொடந்தும் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர முடியாது.
இவர்கள் இருவருக்கும் அதற்கான அங்கீகாரம் இல்லை. ஆகவே உணர்வுகள், கூச்சம், வெட்கம்என்பன இருக்குமாயின் சம்பந்தன் உடனடியாக எதிர்க்கட்சி தலைவர் பதவியை துறக்க வேண்டும்.
இனியும் அவரால் எதிர்க்கட்சியாக செயற்பட எந்த தகுதியும் இல்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவியை மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டர்.