யாழ்ப்பாணம் நீதிமன்றில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்த பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் சுமார் 6 மாதங்களின் பின்னர் வவுனியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
சந்தேகநபர் சிறைச்சாலை காவலிலிருந்து தப்பித்த குற்றத்துக்கான தண்டைத் தீர்ப்பு நாளைமறுதினம் புதன்கிழமை வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட நீதிவான், அன்றுவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவு, ஊர்காவற்றுறை உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த வருடம் ஓகஸ்ட் 10ஆம் திகதி முற்படுத்தப்பட்டார்.
சந்தேகநபரின் விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டதும் அவர், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து நழுவி நீதிமன்றிலிருந்து தப்பிச் சென்றார்.
சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் துரத்திச் சென்றபோதும் சந்தேகநபர் தப்பி ஓடிவிட்டார்.
சந்தேகநபரைத் தேடி பொலிஸார் வலை வீசியிருந்ததுடன், அவரைப் பிடிக்க பொது மக்களிடமும் உதவி கோரியிருந்தனர்.
மேலும் சந்தேகநபரின் மனைவி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அவரும் மன்றில் முற்படதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் வவுனியா பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். எனினும் அவரது மனைவி தலைமறைவிலேயே உள்ளார்.
“நீதிமன்றிலிருந்து சந்தேகநபர் தப்பித்தவேளை, அவரது மனைவி நீதிமன்ற வாயலில் மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் இருந்துள்ளார்.
சந்தேகநபர் சிறைக்காவலர்களிடமிருந்து நழுவி மனைவியின் மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பித்துள்ளார்” என்று பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.