தமிழீழ விடுதலை உணர்வு என்பது 43 ஆண்டுகளாக எமது உதிரத்தில் உறைந்துள்ளது. எமக்கும் புலிகளுக்கும் இடையில் உள்ள உறவு சாதாரணமானது அல்ல என வைகோ தெரிவித்தார்.
மே 17 இயக்கம் சார்பில் தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கில் நேற்று நடைபெற்றது.
நான் நெஞ்சால் பூஜிக்கும் தலைவன், என் வாழ்நாளில் இறுதிவரை தலைவனாக ஏற்றுக்கொண்ட தலைவன், உலகம் இதுவரை கண்டிராத ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்து தமிழனுக்கு இந்த உலகத்தில் முகவரியை தேடிக்கொடுத்த தலைவன் பிரபாகரன் அவர்கள்.
உண்ணாவிரதம் இருக்கும் திலீபனின் தலையை தன் மடியில் தாங்கிக்கொண்டு இருந்தார். எங்கும் கண்ணீர், தவிக்கும் பெற்றோர். இந்த காட்சியை இந்தியாவில் அனைத்து தலைவர்களுக்கு போட்டு காண்பித்தேன்.
அக்டோபர் 10ஆம் திகதி தான் ஈழ வரலாற்றில் மிக முக்கிய திருப்பம் ஏற்பட்டது. அப்போதுதான் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது.
தலைவர் பிரபாகரனை நயவஞ்சகமாக அழைத்து வந்து அசோக்கா ஹோட்டலில் மறைத்து வைத்து விட்டார்கள். இதை உலகுக்கு தெரியப்படுத்தியவன் நான்தான்.
அங்கு 33 நிமிடங்கள் என்னுடன் பேசினார். நானும் நச்சு குப்பி கட்டியிருக்கின்றேன். எமது பிணங்களின் மீதுதான் இந்திய இராணுவம் நடந்து செல்லும். அந்த பிணங்களில் தான் இந்த பிரபாகரனின் சடலமும் கிடக்கும் என எனக்கு சொன்னார்.
எம்.ஜி.ஆரை பிரபாகரன் பார்த்தபோது கட்டிப்பிடித்து அழுதார் எம்.ஜி.ஆர். இந்தியா – இலங்கை ஒப்பந்தத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பிரபாகரனிடம் என்னிடம் எம்.ஜி.ஆர் கூறினார்.
இந்திய இராணுவம் இலங்கையில் தமிழ்மக்களை கொன்று குவித்த போது, குமரப்பன், புலேந்திரன் உள்ளிட்ட 12 புலிகள் நச்சுக்குப்பிகளை கடித்து உயிரிழந்தனர்.
ஒக்டோபர் 5ஆம் திகதி மைதானத்தில் அவர்களுடைய சடலங்களை வைத்த போது என் தலைவன் அங்கு வந்தான். ஆயுதங்களை ஒப்படைப்பதாக கூறிய தலைவன் அன்றுதான் அனைவருக்கும் தெரிய துப்பாக்கியை எடுத்து இடுப்பில் சொறுகினார்.
அப்போதுதான் மோதுவதற்கு தயாராகினார். அப்போது போரிட்டு மடிவது என்று தலைவர் முடிவெடுத்தார்.