மனைவியை தேடி சைக்கிளில் ஊர் ஊராக சுற்றிய தொழிலாளி!

கடந்த மகர சங்கராந்தி அன்று காணாமல்போன தன் மனைவியைக் கண்டுபிடிக்க மிதிவண்டியில் சுமார் 600 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோகர் நாயக். ஒடிசா மாநிலத்தில் தினசரி ஊதியத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வரும், 42 வயதான மனோகர் நாயக் ஜார்கண்ட் மாநிலம், மூசாபனி பாலிகுடா கிராமத்தில் தன் மனைவியுடன் வசித்து வருகிறார்.

இவரின் மனைவி அனிதா, மனநலம் மற்றும் பேசும் திறனில் குறைபாடுடையவர். அனிதா, ஜனவரி 14-ம் தேதி அன்று, மகர சங்கராந்தி விழாவுக்காகக் குமரசால் கிராமத்தில் உள்ள தன் தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இரண்டு நாள்கள் கடந்தும், அனிதா வீடு திரும்பாததால், போலீஸில் புகார் அளித்துள்ளார் மனோகர் நாயக். காணாமல்போன தன் மனைவியைக் கண்டுபிடிப்பதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று அறிந்த மனோகர் நாயக், தனது துருப்பிடித்த சைக்கிளைச் சரி செய்து, கிராமம், கிராமமாகத் தேடல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

24 நாள்கள் தொடர்ந்த நீண்ட தேடல் பயணத்துக்குப் பின்னும் மனைவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், உள்ளூர் செய்தித்தாள்களில், காணாமற்போனவர்கள் பகுதியில் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

செய்தி வெளியான சில நாள்களுக்குப் பின், கரக்பூர் மாநிலத்தில், சாலையோர உணவகம் ஒன்றில் அமர்ந்திருந்த அனிதாவைப் பார்த்த சிலர், காவல்துறைக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

அதன்பின், சற்றும் தாமதிக்காமல் கரக்பூர் காவல்துறையினர் அனிதா புகைப்படத்தை வாட்ஸ் அப் வழியாக மூசாபனி காவல்துறைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் பிரிந்த ஜோடி காதலர்கள் கொண்டாடும் பிப்ரவரி மாதம் 10-ம் திகதி, மீண்டும் இணைந்துள்ளனர்.