இன்னமும் இழுபறியும் தாமதமும் நீங்கியபாடாக இல்லை!

நாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று இன்றுடன் பத்து தினங்கள் நிறைவடைந்தும். உள்ளூராட்சி சபைகளை வென்றெடுத்த கட்சி புதிதாகப் பதவியேற்பதில் இழுபறியும் தாமதமும் இன்னமும் நீங்கியபாடாக இல்லை

முன்னைய காலங்களில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. மாநகரசபை, நகர சபை, பிரதேச சபை ஆகியவற்றின் தலைவர்களையும் உறுப்பினர்களையும் தெரிவு செய்வதற்கான குட்டித் தேர்தலாகவே அதனை மக்கள் கருதி வந்தனர்.

முன்னரெல்லாம் நாட்டின் உள்ளூராட்சிச் சபைகளின் செயற்பாடுகளில் அரசாங்கமும் பெரும்பாலும் தலையீடு செய்வதில்லை. அச்சபைகளை பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றிக் கொள்கின்ற கட்சிகள் குறிப்பிடும்படியான தலையீடுகள் இன்றி பிரதேச நிர்வாகத்தை முன்னெடுப்பதே வழமையாக இருந்தது.

அதேசமயம் தென்னிலங்கையைப் பொறுத்தவரை, அதிகாரத்தில் இருக்கின்ற கட்சி எதுவோ, அக்கட்சியே உள்ளூராட்சி சபைகளில் அதிகமானவற்றை தேர்தலில் கைப்பற்றிக் கொள்வதும் வழக்கமாக இருந்து வந்தது.

அதிகாரத்தில் உள்ள அரசாங்கம் உள்ளூராட்சித் தேர்தலில் இலகுவாக வெற்றி பெறுவதென்பது அக்காலத்தில் சர்வ சாதாரணமாகும்.இத்தகைய காரணங்களாலேயே அன்றைய காலத்தில் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக மக்கள் கூடுதலாகப் பொருட்படுத்திக் கொண்டதில்லை.

ஆனால் கடந்த 10 ஆம் திகதி நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் அவ்வாறானதல்ல. பொதுத் தேர்தல் ஒன்றுக்கு நிகரான முக்கியத்துவத்தையும் பரபரப்பையும் நாடெங்கும் இத்தேர்தல் ஏற்படுத்தியிருந்தது. இதற்கான காரணங்களாக ஏராளமானவற்றைக் கூற முடியும்.

முதலாவதாக இது கலப்பு முறையிலான தேர்தல் ஆகும். தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற முதலாவது தேர்தல் இது. புதிய தேர்தல் முறைமை தொடர்பாக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் நிறைந்திருந்தன.

இரண்டாவது காரணம் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதில் நீண்ட காலமாக நிலவி வந்த இழுத்தடிப்பு.உள்ளூராட்சித் தேர்தல் தாமதமடைந்தமைக்கு எல்லை நிர்ணயம் போன்ற பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும், அரசுக்கு எதிரான சக்திகள் இத்தாமதத்தை தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தத் தவறவில்லை.

அரசாங்கம் தனது செல்வாக்கில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை மூடி மறைப்பதற்காகவே உள்ளூராட்சித் தேர்தலைத் தாமதப்படுத்துவதாக மஹிந்த சார்பு அணியினர் தீவிரமாகவே பிரசாரம் செய்யத் தொடங்கியிருந்தனர். அவர்கள் உருவாக்கிய சர்ச்சையே உள்ளூராட்சித் தேர்தலை பரபரப்பு நிறைந்ததாக மாற்றியிருந்தது.

அரசுக்கும் மஹிந்த அணிக்கும் இடையிலான செல்வாக்கைப் பரிசோதிக்கின்ற பலப்பரீட்சைக் களமாக இத்தேர்தலை நாட்டு மக்கள் தங்களுக்குள் உருவகப்படுத்திக் கொண்டனர்.

நீண்ட கால இழுபறிக்குப் பின்னர் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னரும் கூட தாமதம் இன்னுமே தீர்ந்தபாடாக இல்லை.

தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ள போதிலும், உள்ளூராட்சி சபைகளை வென்றெடுத்த கட்சி புதிதாகப் பதவியேற்பதில் இழுபறியும் தாமதமும் இன்னமும் நீங்கியபாடாக இல்லை.

கடந்த காலங்களில் இவ்வாறானதொரு இழுபறியும் தாமதமும் ஒருபோதுமே இருந்ததில்லை. தேர்தல் நடைபெற்று முடிந்து இன்றுடன் பத்து நாட்கள் நிறைவடைகின்ற இவ்வேளையில், புதிய நிர்வாகங்கள் அச்சபைகளைப் பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால் இப்போது தேர்தலுக்குப் பின்னரும் தாமதம் தொடரவே செய்கின்றது.தேர்தல் சட்டம் திருத்தப்பட்டு கலப்பு முறையில் தேர்தல் நடைபெற்றதன் காரணமாகவே தாமதமும் குழப்பங்களும் தற்போது ஏற்பட்டுள்ளன. பிரதான காரணம் பெண் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம்!தேர்தல் சட்டத் திருத்தத்தின்படி உள்ளூராட்சி சபைகளின் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்குக் குறைந்துவிடலாகாது.

ஆனால் பெரும்பாலான சபைகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் 25 சதவீதம் பெண்கள் கிடையாது. இவ்வாறான சிக்கலொன்று ஏற்படுமிடத்து மாற்று நடவடிக்கை என்னவென்பது புரியாதிருக்கின்றது.

எனவே தான் தேர்தல் சட்டத்தில் விரைவில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென பரவலாக குரல்கள் எழுப்பப்படுகின்றன. இல்லையேல் இக்குழப்பத்துக்கு முடிவு காண்பதென்பது இலகுவானதல்ல.

இது ஒருபுறமிருக்க உள்ளூராட்சி சபைகளில் தற்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதனால், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது அவசியம்.

புதிய தேர்தல் முறைமை என்பதனால் உறுப்பினர்கள் தெரிவில் பலரிடம் போதிய விளக்கமும் இல்லாமலுள்ளது.

இதுபோன்ற சிக்கல்கள் நிறைந்திருப்பதாலேயே உள்ளூராட்சித் தேர்தல் நடந்து முடிந்த பின்னரும் கூட தாமதம் நீடிக்கின்றது.

உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது வரவேற்கத்தக்கதாகும். ஆனாலும் போதியளவு பெண்கள் தெரிவு செய்யப்படாமல் போனதால் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்வு என்னவென்பது புரியாத புதிராக உள்ளது.