‘என் மனைவியின் கருவைக் கலைத்துவிட்டனர்’- எஸ்பி ஆபீஸில் உயிரை மாய்க்க முயன்ற கணவர்!

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காதல் மனைவியைக் கண்டுபிடித்து தரக்கோரி தீக்குளிக்க முயற்சி செய்த மணிகண்டன் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இது குறித்து மணிகண்டனிடம் (27) பேசியபோது, “மார்கண்டேயன்கோட்டைதான் எனது சொந்த ஊர். என் தெருவைச் சேர்ந்த பத்மசுருதி (22) என்ற பெண்ணை காதலித்து ஐந்து மாதத்துக்கு முன்பு திருமணம் செய்துகொண்டேன். நாங்கள் திருமணம் செய்துகொண்டது என் மனைவியின் வீட்டாருக்குப் பிடிக்கவில்லை. ஆரம்பம் முதலே எங்களுக்குப் பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் என் மனைவியை அவரது வீட்டார்கள் அழைத்துச் சென்றனர். அப்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார்.

காதல் மனைவிக்காக கணவர் தீக்குளிப்பு

அவரைக் கூட்பிடச்சென்றேன். என்னுடன் பிரச்னை செய்து என் மனைவியை  அனுப்ப மறுத்துவிட்டனர். போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தும் பயனில்லை. என் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கருவைக் கலைத்துவிட்டனர். என் அனுமதி இல்லாமல் இப்படி செய்துவிட்டதாக மீண்டும் போலீஸில் புகார் கொடுக்கச் சென்றும் என் புகாரை ஏற்கவில்லை. என் மனைவியை அவர்கள் குடும்பத்தாரே அடித்துத் துன்புறுத்துகின்றனர். அவர்களிடமிருந்து என் மனைவியை மீட்க வேறு வழி தெரியாமல் இன்று தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தேன். என் மனைவிக்குத் தற்போது என்ன நடந்தது என்றே தெரியவில்லை” என்று சொல்லி கண்ணீர்விட்டார். மணிகண்டனை தேனி காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர் போலீஸார்.