நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டதொடரின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் எதிர்க்கட்சி தலைமை பதவியை கோருகின்றோம். ரணில் தான் பிரதமராக இருப்பார் என நான் நினைக்கின்றேன். அது ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் உள்ள கொடுக்கல் வாங்கலாகும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவர் வருவார் என்றால் நாங்கள் வெளியே இருந்து எங்கள் ஆதரவை வழங்குவோம் என கூறினோம்.
நாங்கள் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினருக்கு ஆதரவு வழங்க மாட்டோம். அதற்கமைய நாங்கள் எதிர்க்கட்சியில் இருப்போம். எங்களுக்கு எதிர்க்கட்சி போன்ற தகுதியான இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
பிரதமரை ஜனாதிபதி பாதுகாக்கின்றார். எதிர்காலத்தில் நாங்கள் எடுக்கும் தீர்மானம் அரசாங்கத்திற்கு ஆபத்தாக இருக்கும் என மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்துள்ள மஹிந்த தரப்பு, தற்போது ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் செயற்பட்டு வருகின்றது.
தற்போதைய அரசாங்கத்தின் எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.