பெண்கள் சிறு வயதிலேயே பூப்படைவது அதிகமாகிவருவது ஏன்? – மருத்துவ விளக்கம்!

ங்கள் குடும்பத்தில் ஒரு பெண், எதிர்கால குடும்ப வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டாள் என்பதை உணர்த்துவதற்காக கிராமங்களில், `பூப்பு நீராட்டு விழாக்கள்’ வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். விஷயம் என்னவென்றால், இப்போது நடைபெறும் சில பூப்பு நீராட்டு விழா மேடையில் வீற்றிருப்பது இளம் பெண்கள் அல்ல, குழந்தைகள். அதாவது மிகக் குறைந்த வயதிலேயே பூப்பெய்தும் நிகழ்வுகள் வெகுவாக அதிகரித்துவிட்டன!

பெண் குழந்தைகள்

மாதவிடாய், உடல்ரீதியில் இரண்டாம் பாலின மாற்றங்கள்… எனப் பல்வேறு புதிர்கள் முதிர்ச்சியடையாத வயதில் தோன்றும்போது, அவற்றை எதிர்கொள்ளும் குழந்தைகளின் மனநிலையை விவரிப்பது கடினம். `மிகக் குறைந்த வயதில் பூப்படையும் பெண்களுக்கு எதிர்காலத்தில் மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன’ என்கிறது ஆராய்ச்சி.

வகைகள்…

இப்படி, பெண்கள் அதிவிரைவில் பூப்படைவதை மருத்துவரீதியாக இரு வகைகளாகப் பிரிக்கலாம். பிட்யூட்டரி சுரப்பி சார்ந்து வருவதை, `சென்ட்ரல் பிரிகோசியஸ் பியூபெர்ட்டி’ (Central precocious puberty) என்றும், பிட்யூட்டரி சுரப்பி தொடர்பு இல்லாமல், நேரடியாக ஹார்மோன் தொந்தரவுகளால் வருவதை `பெரிபெரல் பிரிகோசியஸ் பியூபெர்ட்டி’ (Peripheral precocious puberty) என்றும் வகைப்படுத்தலாம். `ப்ரீமெச்சூர் திலார்ச்சே’ (Premature thelarche) என்பது மிகக் குறைந்த வயதில் (ஆறு வயதுக்குள்), மாதவிடாயின்றி மார்பக வளர்ச்சி மட்டும் சில குழந்தைகளுக்குக் காணப்படும். ஆனால், அதற்கென தனி மருத்துவம் தேவையில்லை, தானாகவே சரியாகிவிடும்.

உடலியங்கியல்

மூளையில் உள்ள ஹைப்போதாலமாஸ் (Hypothalamus) பகுதியிலிருந்து சுரக்கும் `கோனாடாட்ராபின்-ரிலீஸிங் ஹார்மோன்’ (Gonadotrophin-releasing hormone), பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டி, `லூட்டினைஸிங்’ (Luteinizing) ஹார்மோன் மற்றும் `ஃபாலிக்கிள் ஸ்டிமுலேட்டிங்’ (Follicle stimulating) ஹார்மோனைச் சுரக்கச் செய்யும். இந்த இரண்டு ஹார்மோன்களும் பெண்களின் சினைப்பையைத் தூண்டி `ஈஸ்ட்ரோஜென்’ (Estrogen) ஹார்மோனைச் சுரக்கச் செய்தும், ஆண்களில் விதைப்பையைத் தூண்டி, `டெஸ்டோஸ்டீரான்’ (Testosterone) ஹார்மோனைத் சுரக்கச் செய்தும் இரண்டாம் பாலினச் செயல்பாடுகளை (Secondary sexual characters) உருவாக்கும். இது பருவமடைவதற்கான பொதுவான உடலியங்கியல் செயல்பாடு. மிகக் குறைந்த வயதிலேயே இந்தச் செயல்பாடுகள் தொடங்கிவிடுவதுதான் அதி விரைவில் பூப்படைவதற்கான அடிப்படை.
காரணங்கள்…

மூளையில் அடிபடுதல், கட்டி, சில மரபியல் நோய்கள் காரணமாக அதி விரைவில் பூப்படையும் நிலை ஏற்படலாம். முறையான வயதில் பூப்பெய்துவதற்கு உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மற்றும் பரம்பரையும் காரணமாகின்றன. தவறான உணவுப் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது, சிறு வயது முதலே முறையற்ற வாழ்வியல் முறைகளை ஊக்கப்படுத்துவது இவை இரண்டுமே விரைவில் பூப்பெய்துவதற்கு மட்டுமல்ல, பல்வேறு தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கும் முக்கியமான காரணங்களாக அமைகின்றன. மரபியல், அடிபடுதல், சில நோய்கள் காரணமாக விரைவாக பூப்பெய்தும் நிகழ்வு தவிர்த்து, உணவியல் மற்றும் வாழ்வியல் காரணமாக உண்டாகும் அதி விரைவில் பூப்பெய்தும் நிலைமையை தாராளமாகத் தடுக்க முடியும்.

 

உடல் பருமனும் பூப்பெய்துவதும்

அதி விரைவில் பூப்படைதலுக்கு குழந்தைப் பருவத்திலேயே ஏற்படும் உடல் பருமன் முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது (Childhood obesity). உடல் உழைப்பின்மை, முறையற்ற உணவுப் பழக்கம் காரணமாக சிறு வயதிலேயே ஏற்படும் உடல் பருமனால் உடலில் ஹார்மோன் உந்துதல் ஏற்பட்டு, விரைவில் பூப்பெய்துகின்றனர் குழந்தைகள். ஆரோக்கியமான உணவு முறைகளை பிள்ளைகளுக்குச் சொல்லித்தருவது இப்போது பெற்றோர்களின் முக்கியமான கடமையாகிறது. குழந்தைகளுக்கு டைப் 2 சர்க்கரைநோய்… மிகக் குறைந்த வயதிலேயே பூப்பு சுழற்சி… இப்படிக் குழந்தைகளின் மனநிலையையும் உடல்நிலையையும் பாடாகப்படுத்தும் சூழல் பன்மடங்கு அதிகரித்துவிட்டன.
பூச்சிக்கொல்லிகளும் களைக்கொல்லிகளும்

உணவுப் பொருள்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம், சில ஆபத்தான ரசாயனங்கள் எனச் சூழலைக் கெடுக்கும் மாசுகளும் காரணமாகின்றன. களைக்கொல்லிகளும் செயற்கை உரங்களும் விரைவாக பூப்பு ஏற்படுத்துவது தொடங்கி, விரைவாக புற்றுநோயையும் உண்டாக்கும். பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஒரு களைக்கொல்லி மருந்து, தாராளமாக நமது விவசாயச் சந்தையில் புழக்கத்திலிருப்பதைப் கண்கூடாகப் பார்க்கலாம்.
பிளாஸ்டிக் பொருள்களின் தாக்கம்

பிளாஸ்டிக் பொருள்களில் உள்ள `பிஸ்பீனால் ஏ’ (Bisphenol A), தாலேட்ஸ் (Phthalates) போன்ற வேதிப் பொருள்கள், இயல்பான ஹார்மோன் செயல்பாட்டுக்கு குந்தகம் உண்டாக்கி, விரைவில் பூப்பு சுழற்சியை ஏற்படுத்துகின்றன. குழந்தைப் பருவத்தில் பிளாஸ்டிக் பொருள்களால் செய்யப்பட்ட பொம்மைகளைத் தவிர்ப்பது நல்லது. வீடு முழுவதும் பரவிக்கிடக்கும் பிளாஸ்டிக் பொம்மைகளோடு குழந்தைகள் விளையாடும்போது, பிளாஸ்டிக்கின் தாக்கம் சிறிது சிறிதாக குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதிப்படையச் செய்யும். விபரீதங்களை உண்டாக்கும் பிளாஸ்டிக் பொம்மைகளுக்கு மாற்றாக மரப்பாச்சி பொம்மைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு ஆசை ஆசையாக உணவூட்டவும், நீர் புகட்டவும் பிளாஸ்டிக் தட்டுகளும் டம்ளர்களும் வேண்டவே வேண்டாம்.

பிளாஸ்டிக் பொருள்கள்

விளையாட்டு அவசியம்!

`அதிகமாகப் பழங்களையும் காய்களையும் சாப்பிடுவதால், பூப்பெய்துவது முறைப்படுத்தப்படும்’ என்கிறது `தி நியூ பியூபெர்ட்டி’ (The New Puberty) எனும் ஆய்வுப் புத்தகம். இளம் வயது முதலே நொறுக்குத்தீனிகளுக்குத் தடைவிதித்து, இயற்கையான பழங்களையும் காய்களையும் சாப்பிடச் சொல்லிக் கொடுங்கள். `தாய்ப்பாலை அதிக நாள்களுக்கு அருந்திய குழந்தைகளுக்கும், பூப்படைதல் சரியான வயதில் நடைபெறும்’ என்கிறது அந்த ஆராய்ச்சி. குறைந்தது ஒரு வருடமாவது தாய்ப்பால் புகட்டுவதால், பல்வேறு நோய்களைத் தடுக்கும் வலிமை குழந்தைகளுக்குக் கிடைக்கும். பள்ளிகளிலும், வீடு திரும்பிய பின்னர் மாலை வேளைகளிலும் ஓடியாடி விளையாடும்படி ஊக்கப்படுத்துங்கள். இளம் வயதில் உடல் பருமன் ஏற்பட்டு, ஹார்மோன் சீர்கேடுகள் உண்டாவது பெருமளவில் தடுக்கப்படும். மகிழ்ச்சியான சூழலில் குழந்தைகள் வளர்வதும் மிகவும் அவசியம். குழந்தைகளுக்கு ஏற்படும் மனஅழுத்தமும் விரைவில் பருவமடையச் செய்யும்.
பரிசோதனை

மார்பக வளர்ச்சி, அக்குள் மற்றும் இனப்பெருக்க உறுப்பில் முடி வளர்ச்சி, மாதவிடாய், முகப்பருக்கள் தோன்றுதல் போன்ற உடல் சார்ந்த அறிகுறிகள் விரைவில் தோன்றுவதோடு, உளவியல்ரீதியாக குழந்தைகளுக்கு மிகப் பெரிய சிரமத்தைக் கொடுக்கக்கூடிய குறைபாடாக அதிவிரைவில் பூப்பெய்தும் நிலையைப் பார்க்கவேண்டியிருக்கிறது. மிகக் குறைந்த வயதில் மேற்சொன்ன அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை நாடுவது சிறந்தது. எளிய ரத்தப் பரிசோதனை மூலம் ஹார்மோன் அளவுகளைக் கண்டறிதல், எலும்புகளின் வளர்நிலையைப் பரிசோதிப்பது போன்றவற்றின் மூலம் பிரச்னையைக் கண்டறியலாம். ஹார்மோன்களின் குழப்ப நிலையில் தொந்தரவு ஏற்படுகிறதா அல்லது வேறு ஏதாவது நோய்க் காரணமாக உண்டாகிறதா என்பதை அறியவேண்டியதும் அவசியம். அதி விரைவில் பூப்பெய்தும் குழந்தைகளுக்கு, நிலைமையைப் பக்குவமாக எடுத்துரைப்பது பெற்றோர்களின் முக்கியக் கடமை.

நாப்கின்

உயரம்

அதி விரைவில் பூப்பெய்தும் குழந்தைகள், ஆரம்பத்தில் தனது சம வயதுக் குழந்தைகளைவிட உயரம் அதிகமாக இருப்பதைப்போலத் தெரிந்தாலும், விரைவாகவே எலும்புகளின் வளர்ச்சி முழுமையடைந்துவிடுவதால், அவர்களின் உயரம் சற்றுக் குறைவாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சிறுவர்களுக்கு…

சிறுமிகளுக்கு ஏற்படுவதைப்போல, ஹார்மோன் தொந்தரவுகளால் சிறுவர்களுக்கும் பாலின மாற்றங்கள் அதி விரைவில் ஏற்படக்கூடும். விதைப்பை மற்றும் ஆணுறுப்பு வளர்ச்சி, அரும்பு மீசை முளைத்தல், முகப்பரு தோன்றுதல், குரலில் மாற்றம் உண்டாதல் போன்றவை மிகக் குறைந்த வயதில் ஏற்படும். விரைவாகப் பருவமடையும் நிகழ்வு ஆண்களைவிட பெண்களுக்கே அதிகளவில் ஏற்படுகிறது.
குழந்தையானது வாலிப பருவம் எட்டுவதை சுட்டிக்காட்டுவது, பருவமடையும் நிகழ்வாக அறியப்பட்டது. ஆனால் இன்று, பிஞ்சுக் குழந்தைகளுக்குள் வாலிபப் பருவம் வலுக்கட்டாயமாக நுழையத் தொடங்கிவிட்டது… அதி விரைவில் பருவமடைதல் என்ற வடிவத்தில்! ’குழந்தைகளுக்கு மாதவிடாய்…’ அச்சத்தைக் கொடுக்கும் நிகழ்வு இனி ஏற்படாத வகையில் ஆரோக்கியமான வாழ்வியலையும் உணவியலையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம்!