`உனக்காகப் போராடுபவர் உன்னோடு இருக்கிறார்!’ – பைபிள்

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்கிவிட்டது. தவக்காலத்தில், `சிலுவைப் பாதை’ என்ற ஒரு நிகழ்வு மிகவும் சிறப்பானது. சிலுவைப் பாதை (Stations of the Cross) என்பது இயேசு கிறிஸ்து மனிதனாக வாழ்ந்த காலத்தில், இறுதி நாள்களில் துன்பங்களை அனுபவித்து, சிலுவையில் தம் உயிரைவிட்ட நிகழ்வுகளை நினைவுகூரக்கூடிய ஒரு வழிபாட்டுச் செயல். இந்த வழிபாட்டுச் செயல், பெரும்பாலும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படுகிறது.

சிலுவைப் பாதை

இயேசு கிறிஸ்து துன்பங்களை அனுபவித்து உயிர் துறந்த ஜெருசலேமுக்கு திருப்பயணம் சென்றுவர கிறிஸ்தவர்கள் விரும்புவதுண்டு.  அங்கே இயேசு தோள் மீது சிலுவையைச்  சுமந்தபடி சென்ற வழித்தடங்களில், கிறிஸ்தவர்கள் தாங்களும் நடந்து சென்று அவர்பட்ட கஷ்டங்களைத் தாங்களும் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், எல்லோராலும் ஜெருசலேம்  சென்றுவர முடியாது என்பதால், ஆங்காங்கே சிலுவைப் பாதை நிலைகளை அமைத்து, அவற்றின் முன் முழங்காலிட்டு ஜெபம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இயேசுவைக் கொலை செய்ய அவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிகழ்ச்சி, அவர் மீது சிலுவையைச் சுமத்திச் சுமக்கவைத்த நிகழ்ச்சி, அவர் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்ச்சி, சிலுவையில் அறையப்பட்டு உயிரைவிட்ட நிகழ்ச்சி… என ஒவ்வொரு நிலையையும் உருவச்சிலைகளாக வடிவமைத்து, அவை ஒவ்வொன்றின் முன்பும் முழங்காலிட்டு, கண்ணீர்விட்டு, உருக்கமாக வழிபடுவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார்கள். இதை ஒரு தியானமாகவும் கருதுகிறார்கள். கி.பி 18-ம் நூற்றாண்டில்தான் இந்த வழக்கம் கிறிஸ்தவர்கள் மத்தியில் பரவத் தொடங்கியது.

சிலுவைப் பாதை

இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களை நினைவுபடுத்தி, தியானம் செய்வதுடன் இறைவனை நோக்கி மன்றாடுவதற்காக மொத்தம் 14 நிலைகளை ஏற்படுத்தி அதன்படி  தங்கள் வழிபாடுகளை நடத்திவருகின்றனர்.

1)  இயேசுவுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

2) இயேசுவின் மீது சிலுவை சுமத்தப்படுகிறது.

3) இயேசு முதன்முறையாக கீழே விழுகிறார்.

4) இயேசு தன்னுடைய தாய் மரியாவைச் சந்திக்கிறார்.

5)  சீமோன் என்பவர் இயேசு கிறிஸ்து சுமக்கும் சிலுவையைச் சுமந்து உதவுகிறார்.

6) `வெரோனிகா’ என்ற  பெண், தான் கொண்டு வந்திருந்த துணியால் இயேசுவின் முகத்தைத் துடைக்கிறார்.

7) இயேசு கிறிஸ்து இரண்டாவது முறையாகக் கீழே விழுகிறார்.

8) ஜெருசலேம் நகரத்துப் பெண்கள் அங்கே வர,  அவர்களை இயேசு சந்திக்கிறார்.

9) இயேசு மூன்றாவது முறையாகக் கீழே விழுகிறார்.

10) இயேசு அணிந்திருந்த ஆடைகள் அவிழ்க்கப்படுகின்றன.

11) இயேசு கிறிஸ்துவை மரத்தால் ஆன சிலுவையில் ஆணியைக் கொண்டு அறைகிறார்கள்.

12) சிலுவையில்  அறையப்பட்ட இயேசு உயிரைவிடுகிறார்.

13) இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து கீழே இறக்கப்படுகிறது.

14) உயிரிழந்த இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்.

இவ்வாறு இயேசு கிறிஸ்துவுக்கு கொலைத்  தண்டனை விதிக்கப்பட்டது முதல் அவரை சிலுவை மரத்தில் அறைந்து கொல்லும் வரையிலான  நிகழ்வுகளை நினைவுபடுத்தும் நிகழ்வே இந்த  சிலுவைப் பாதை.

சிலுவை

“பல ஆண்டுகளாக சிலுவைப் பாதையில் கலந்துகொள்கிறேன். அப்போதெல்லாம் மனமுருக வேண்டுகிறேன், ஆனால், எந்தப் பலனும் இல்லை’’ என்று சொல்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள். “என்னால் பாவம் செய்யாமல் இருக்க முடியவில்லை. ஆசை என்னை ஆட்டிப்படைக்கிறது; பாவம் என்னை பாடாகப்படுத்துகிறது’’ என்று சொல்லிக்கொண்டு புனிதத்துக்கான போராட்டத்தைக் கைவிடாமல் இருக்க வேண்டும்; வீழ்ந்துகிடக்கும் நம் உணர்வுகளைத் தட்டிக்கொடுத்து மீண்டும் போராட அழைக்கிறது திருச்சபை.

`பாவத்தால் வீழ்ந்துகிடக்கும் மனிதன் எப்போதெல்லாம் எழுந்து நடக்கிறானோ, போராடத் தொடங்குகிறானோ அப்போதுதான் அவன் உண்மையான கிறிஸ்தவனாகிறான்’ என்கிறது திருச்சபை. ஏனென்றால், இயேசுவே ஒரு போராளியாக இருந்துதான் நம்மையெல்லாம் மீட்டார். ஆகவே, `நல்ல கிறிஸ்தவனாக வாழ வேண்டும்’ என்று எடுத்துக்கொண்ட முயற்சியில் தோல்வி ஏற்பட்டால், மனமுடைந்துவிட வேண்டாம். மனதைத் தட்டிக்கொடுத்து, நல்லதொரு புனிதப்பயணத்துக்குத் தயாராக வேண்டும், ஏனென்றால், `உனக்காகக் போராடுபவர் உன்னோடு இருக்கிறார்’ என்கிறது கிறிஸ்தவம்.

பாவத்துக்கு எதிரான தொடர்ச்சியான நல்ல முயற்சிகளே புனிதத்தின் ஆரம்பம் என்பதை உணர்ந்தவர்களாக இந்தப் புனிதப் பயணத்தில் பங்கெடுப்போம்.