பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற 11,400 கோடி மோசடி வழக்கில் பெரும் செல்வந்தர் முகேஷ் அம்பானியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் திருபாய் அம்பானியின் சகோதரர் நாதுபாய் அம்பானியின் மகன் விபுல் அம்பானி.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த விபுல், கடந்த 1993-ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தில் இருந்து விலகி பல நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
பின்னர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நிரவ் மோடியின் பயர்ஸ்டார் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக செயலாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், இவருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற 11,400 கோடி ரூபாய் மோசடி வழக்குக்கும் சம்பந்தம் இருக்கலாம் என கருதிய சிபிஐ பொலிசார், விபுல் அம்பானியை கைது செய்துள்ளனர்.
மேலும், பயர்ஸ்டார் நிறுவனத்தின் மூத்த அதிகாரி அர்ஜூன் பாட்டில், நட்ஷத்ரா க்ரூப் நிதித்துறைத் தலைவர் கபில் கான்டேல்வால், கீதாஞ்சலி நிறுவன மேலாளர் நிதிஷ் ஷாகி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் சிபிஐ தனிப்பிரிவு பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.