இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்’ – தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும் தினகரனும் தொடர்ந்து கூறிவரும் வார்த்தைகள் இவை. எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர். ‘தினகரன் ஆதரவு தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களிடம் எடப்பாடி பழனிசாமியின் தூதுவர்கள் பேசி வருகின்றனர். தீர்ப்பு வருவதற்குள் அவர்களில் சிலர் அ.தி.மு.க அரசுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.
அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் இணைந்த பின்னர், தினகரன் மட்டும் தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக, தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருக்கிறார் தினகரன். புதிய கட்சிக்கு மூன்று பெயர்களை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்னமும் வரவில்லை. அதேபோல், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் முடிவு, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முன் இருக்கிறது. ‘எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம்’ என்பதால் தி.மு.க முகாமில் கூடுதல் சுறுசுறுப்பு தென்படுகிறது. தகுதிநீக்கத்துக்கு எதிராகத் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களாக இருந்த 18 பேரும் கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கோடு சேர்த்து, நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது எனக் கோரிய வழக்கு, சட்டசபைக்குள் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் குட்கா கொண்டு வந்த வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன.
எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் ஆஜரான முதல்வர் தரப்பு வழக்கறிஞர், ‘முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்பது கட்சியிலிருந்து வெளியேறும் நிலையையே காட்டுகிறது. கட்சி விவகாரங்கள் தொடர்பாக ஆளுநரைச் சந்தித்துப் பேசியது ஏற்க முடியாது. உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட சசிகலாவை ஏற்க முடியாது என்று பன்னீர்செல்வம் தலைமையிலான குழு எடுத்த முடிவை அனைவரும் ஏற்றுள்ளனர். கட்சித் தாவல் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது’ எனத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதியரசர், ‘தகுதிநீக்கம் தொடர்பான புகாரை சபாநாயகர் நிராகரிக்கலாமா’ எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த தினகரன் தரப்பு வழக்கறிஞர், ‘சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் மனு அளித்திருந்தால் மனுவை சபாநாயகர் நிராகரிக்கலாம்’ எனத் தெரிவித்தார்.
‘இந்த வழக்கின் தீர்ப்பு ஆளும்கட்சிக்கு எதிராகத்தான் வரும்’ எனப் பேசத் தொடங்கிவிட்டனர் தினகரன் தரப்பினர். ‘கூவத்தூர் ஆபரேஷன் நடந்தபோதும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோதும் ஸ்டாலின் சரியாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு தி.மு.க-வினர் மத்தியில் உள்ளது. தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு ஆட்சிக்கு எதிராக வரும்போது, தி.மு.க தலைமை உரிய முடிவை எடுக்க வேண்டும்’ எனவும் உடன்பிறப்புகள் பேசத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், தகுதிநீக்கத்துக்கு ஆளான 18 எம்.எல்.ஏ-க்களையும் வளைக்கும் முயற்சியில் அமைச்சர்கள் சிலர் இறங்கியுள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், “மன்னார்குடி குடும்பத்து வசம் இனி அ.தி.மு.க செல்வதற்கு வாய்ப்பில்லை. இதை 18 தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களிடமும் உறுதியாகத் தெரிவித்துவிட்டோம். தினகரன் ஆதரவாளர்களை வளைக்கும் முயற்சியில் உளவுத்துறையின் முக்கிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 18 எம்.எல்.ஏ-க்களிடமும் சில தகவல்களை அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் பேசும்போது, ‘எந்தச் சூழ்நிலையிலும் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் பிரிய மாட்டார்கள். இரட்டை இலைக்கு உள்ள உரிமையையும் அவர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தினகரனுடன் சமரசத்துக்கு வருவார்கள் என இன்னமும் நீங்கள் நம்பிக்கொண்டிருக்க வேண்டாம்.
நீதிமன்றத் தீர்ப்பு எப்படி அமைந்தாலும் அதைப் பற்றி எடப்பாடி பழனிசாமி கவலைப்படப்போவதில்லை. தீர்ப்பு வருவதற்குள் நீங்கள் எடப்பாடி பழனிசாமியுடன் வந்துவிடுவது நல்லது. அப்படி வந்துவிட்டால், அந்தத் தீர்ப்புக்கு எதிராக நாங்கள் மேல்முறையீட்டுக்குச் செல்ல மாட்டோம். சசிகலா குடும்பத்துக்காக அதிகாரத்தை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, ஜானகி களத்துக்கு வந்தாலும், அரசியல்ரீதியாக அவரால் வெற்றி பெற முடியாததால் ஜெயலலிதாவுக்கு விட்டுக் கொடுத்தார். ஜானகி முழுநேர அரசியல்வாதியாக இருந்ததில்லை. அவருக்கு இந்தக் களம் புதிதாக இருந்தது.
தற்போது நிலைமை அப்படியல்ல. பன்னீரும் எடப்பாடியும் முழுநேர அரசியல்வாதிகள். அவர்களுக்குள் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் இரட்டை இலையை அவர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஒற்றுமை அவசியம் என்பதை இருவரும் புரிந்து வைத்திருக்கிறார்கள். இந்த ஆட்சியை மத்திய அரசும் கவிழ்க்கப்போவதில்லை. அதனால்தான் தமிழக அரசின் விழாவுக்கு பிரதமர் மோடி வருகிறார். ராஜதந்திரத்துடன் அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் ஸ்டாலினும் தினகரனும் இருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் இப்போதே எடப்பாடி அணிக்கு வந்துவிட்டால், அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட உங்களுக்கு சீட் கொடுப்பார் முதல்வர்’ எனப் பேசியுள்ளனர். இந்த அழைப்புக்குப் பதில் அளித்த தினகரன் அணியைச் சேர்ந்தவர்களும், ‘எங்களுக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்’ எனக் கூறியுள்ளனர். ‘தினகரன் அணியினர் தன்பக்கம் வருவார்கள்’ என உறுதியாக நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி” என்றார் விரிவாக.
“ஆட்சியில் உள்ளவர்களின் தூது முயற்சியை உணர்ந்ததால்தான், ’18 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன். இவர்கள் அத்தனை பேரும் தியாகிகள்’ எனப் பேசி வருகிறார் தினகரன். ஒரே ஒரு எம்.எல்.ஏ-வை வைத்துக்கொண்டு ஆட்சியைக் கலைக்க முடியாது என்பதை தினகரனும் அறிவார். நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக வரும்பட்சத்தில், தி.மு.க துணையோடுதான் அவர் ஆட்சியைக் கவிழ்க்க முடியும். இது அரசியல்ரீதியாகத் தினகரனுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். எடப்பாடி பழனிசாமி வலுவடைவதற்கு இதுவும் ஒரு காரணமாக மாறிப் போகும். ‘தி.மு.க-வுடன் சேர்ந்துகொண்டு அம்மா உருவாக்கிய ஆட்சியைக் கலைத்துவிட்டார்’ என மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யவும் ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும். இதையும் மன்னார்குடி சொந்தங்கள் புரிந்து வைத்துள்ளனர்” என்கின்றனர் அ.தி.மு.கவின் முன்னணி நிர்வாகிகள் சிலர்.