விஷவாயு தாக்கி இறப்பவர்கள் எண்ணிக்கையில் முதலிடம் தமிழகத்துக்கு!

கடந்த வாரம்… காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், போந்தூர் பகுதி – ஒரு நட்சத்திர ஹோட்டலில் கழிவு நீர் சுத்தம் செய்யச் சென்ற மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்தனர்.

கடந்த வாரம்… ஆந்திர மாநிலம், சித்தூர் – ஒரு கோழிப்பண்ணையில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஏழு தொழிலாளர்கள், விஷயாயு தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர்… கோவை – ஒரு நகைப்பட்டறை கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் இறந்துபோனார்கள்…

அரிதாக நடக்கும் விபத்து, ஆண்டுக்கொரு முறை நடக்கும் அசம்பாவிதம் என்பதையெல்லாம் கடந்துவிட்டது இந்த நிகழ்வு. `விஷவாயு தாக்கி மூன்று பேர் பலி’, `ஐந்து பேர் பலி’, `ஏழு பேர் பலி’… செய்திகள் இப்போது தொடர்கதை. சர்வசாதாரணமாக பலியாகிக்கொண்டிருக்கின்றன மனித உயிர்கள்.பாடம் நாராயணன்

“மற்ற விபத்துகளை, மரணங்களைவிட மிகவும் கொடுமையானது விஷவாயு தாக்கி இறந்துபோவது. சாகும் தறுவாயில் அவர்கள் படும் அவஸ்தையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது’’ என்கிறார் சமூகநல ஆர்வலர் `பாடம்’ நாராயணன்.

ஏன் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன… அவற்றை எப்படித் தடுப்பது என்பது குறித்தும் பேசுகிறார் `பாடம்’ நாராயணன்… “மனிதக்கழிவுகளை நீக்கும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது’ என்று 1993-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. முன்பெல்லாம் உலர் கழிப்பிடங்கள்தாம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. அந்தக் கழிப்பிடங்களில், மனிதக்கழிவுகளை மனிதர்களேதான் அகற்ற வேண்டியிருக்கும். செப்டிக் டேங்க்குகள் இருக்காது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் நகர் விரிவாக்கமும், ஓர் ஊர் நகரமயமாவது அதிகமாக நடந்தன. அதன் பின்னர் உலர் கழிப்பிடங்கள் பெருமளவில் குறைந்தன. பதிலாக, இப்போது பயன்படுத்தப்படும் நவீனக் கழிப்பிடங்கள் பெருகின. மாநகரங்களில் பாதாளச் சாக்கடைகளும், செப்டிங் டேங்குகளும், நகரம் மற்றும் கிராமப்புறங்களில் செப்டிக் டேங்குகளும் அதிகமாகின. அதனால்தான், தமிழ்நாட்டில் கழிவுநீர்த் தொட்டிகளுக்குள் இறங்கும்போது விஷவாயு தாக்கி, மூச்சுத் திணறி இறப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

சாக்கடை

இந்த இறப்புகள் அதிகமானதும், `பாதாளச் சாக்கடை மற்றும் செப்டிக் டேங்க்குகளில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்ய வைக்கக் கூடாது’ என்று 2013-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. பிறகு, பாதாளச் சாக்கடையையும் செப்டிக் டேங்க்கையும் சுத்தம் செய்வதற்கு இயந்திரங்கள் அதிகமாக வாங்கப்பட்டன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இதற்கான இயந்திரங்கள் அதிகமாக வாங்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும், மனிதர்களை இறக்கி சுத்தம் செய்யும் அவலம் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது.

துப்புரவுப் பணி முழுவதுமாக தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டதுதான் இதற்கு முக்கிய காரணம். இப்போது, அரசு நேரடியாக இதுபோன்ற வேலைகளுக்கு ஆளெடுப்பதில்லை. கான்ட்ராக்டர்கள் மூலமாகவே ஆள் சேர்ப்பு நடக்கிறது. பணி சேய்யும்போது யாராவது உயிரிழந்தால், அதற்கு அந்த கான்ட்ராக்டரைக் கைகாட்டிவிட்டு, அரசாங்கம் தப்பித்துக்கொள்கிறது.

`கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி ஒருவர் உயிரிழந்தால் மட்டுமல்ல… தொட்டிக்குள் இறங்கினாலே, அந்த இடத்தின் உரிமையாளரைக் கைது செய்ய வேண்டும்’ என்று சட்டத்தில் குறிப்பு உள்ளது. இந்த இறப்புகளுக்கெல்லாம் அரசாங்கம் மட்டுமல்ல… ஒவ்வொரு தனிமனிதனும்தான் காரணம்.

மரணக்குழி

குறிப்பிட்ட கால இடைவெளியில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்யாமல் விடுவதுதான் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படக் காரணமாகிறது. டேங்க் எப்போது நிரம்புகிறதோ அப்போதுதான் சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் நம் மக்களுக்கு இருக்கிறது. அப்படி, பல நாள்கள் கழித்து சுத்தம் செய்யும்போது டேங்க்கின் அடிப்பகுதியில் மலம் இறுகிப்போய், ஒரு பாறைபோல் ஆகிவிடும். அதை இயந்திரங்களின் மூலம் சுத்தம் செய்ய முடியாது. அதனால், மனிதர்களை இறக்கி, கடப்பாரை, மண்வெட்டியால் சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். பல நாள்களாக கழிவுகள் அடியில் தேங்கி இருப்பதால்தான், அது விஷவாயுவாக மாறி உயிரைப் பறிக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் ஒவ்வொரு தனி மனிதரும்தான் பொறுப்பு.

`பாதாளச் சாக்கடைக்குள், செப்டிக் டேங்க்குக்குள் பராமரிப்புப் பணிகளுக்கு வேண்டுமானால் மனிதர்கள் இறங்கலாம்’ என்று நீதிமன்றம் அனுமதியளித்திருக்கிறது. ஆனால், இறங்குவதற்கு முன்னர் பல்வேறு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும். தொட்டிக்குள் இருக்கும் கழிவுகளையும், கழிவு நீரையும் முற்றிலுமாக அகற்றிவிட வேண்டும். விஷவாயு இருக்கிறதா, இருந்தால் எந்தத் தன்மையில் இருக்கிறது, உள்ளே போதிய அளவு பிராணவாயு இருக்கிறதா என்பதை கேஸ் சென்சார் (Gas sensor) மூலமாகப் பரிசோதனை செய்த பின்னரே மனிதர்களை இறக்கிவிடவேண்டும். ஆனால், தனியார் நிறுவனங்களில், வீடுகளில் இந்த வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. அதனால்தான் மரணம் நிகழ்கிறது.

கையால் சுத்தம் செய்யும் கொடுமை

மரணங்களிலேயே மிகவும் கொடுமையான மரணம் இதுதான். கழிவுநீர்த் தொட்டிக்குள் மாட்டிக்கொண்டு இறந்தவர்களை வெளியில் எடுப்பதற்கே பல மணி நேரம் ஆகும். அப்படியென்றால், அவர்கள் உள்ளே எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். நேரடியாக இறப்பவர்கள்தாம் வெளியே தெரிகிறார்கள். இந்த பாதிப்புகளால் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் வெளியே தெரிவதில்லை.

பல மாற்றுத் திட்டங்களை அரசிடம் தொடர்ந்து முன்வைத்து வருகிறோம். ஆனால், எந்த அரசாங்கமும் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. `யாரோ, எங்கோ இறக்கிறார்கள்…’ என்ற அலட்சியப்போக்கு அரசிடமும் இருக்கிறது, மக்களிடம் இருக்கிறது” என்கிறார் பாடம் நாராயணன்.

மருத்துவர் புகழேந்திவிஷவாயு என்றால் என்ன… கழிவுகளைச் சுத்தம் செய்வதால் என்னென்ன உடல்நல பாதிப்புகள் உண்டாகும் என்பதைப் பொதுநல மருத்துவர் புகழேந்தி விளக்குகிறார்… “விஷவாயு என்பது, மிகவும் ஆபத்தான மீத்தேன் வாயு. வாயு வெளியேறிய அடுத்த கணமே ரத்த அழுத்தம் குறைந்து தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டுவிடும். அடுத்ததாக இதயமும் நுரையீரலும் (Cardiorespiratory arrest) செயலிழந்து போய்விடும். அடுத்த சில நிமிடங்களிலேயே மரணமடைந்துவிடுவார்கள்.

மனிதக்கழிவுகளை அகற்றுபவர்களுக்குத் தோல் தொடர்பான பாதிப்புகள் அதிகமாக உண்டாகின்றன. நீர் மூலம் பரவக்கூடிய எல்லா நோய்களும் பரவுகின்றன. அலர்ஜி, நோய்த்தொற்று ஏற்பட்டு உடலெங்கும் புண்கள் உண்டாகின்றன. இவை மட்டுமல்ல… சிலருக்கு மனநல பாதிப்புகள்கூட ஏற்படுகின்றன. கழிவுநீர்த் தொட்டிகளை மனிதர்கள் சுத்தம் செய்யக் கூடாது என்று சட்டம் உள்ளது. கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி இறப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்த இறப்பு சதவிகிதத்தில் கிட்டத்தட்ட 44 சதவிகித உயிரிழப்புகள் தமிழ்நாட்டில்தான் நிகழ்கின்றன. அரசாங்கம் இதுபற்றி அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. மக்களிடமும் போதிய விழிப்பு உணர்வு இல்லை” என்கிறார் மருத்துவர் புகழேந்தி.

துப்புறவுத் தொழிலாளர்கள்

இது குறித்து மாநில பேரூராட்சிகளின் (திட்டம்) இணை இயக்குநர் மலையமானிடம் பேசினோம் “ஒருவர் தன் வீட்டிலோ, அலுவலகத்திலோ கழிவுகளைச் சுத்தம் செய்ய, அருகிலிருக்கும் பேரூராட்சி, நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டும். நன்றாகப் பயிற்சி பெற்ற, அதற்கான இயந்திரங்களைக் கையாளத் தெரிந்த நபர்கள் அங்கே இருப்பார்கள். அவர்களை நாங்கள் அனுப்புவோம். யாரும் நேரடியாகக் கழிவுகளைச் சுத்தம் செய்ய யாரையும் நிர்பந்திக்கக் கூடாது. அப்படிச் செய்வதால்தான் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு வீட்டிலும் கழிவுகளை அகற்ற நாங்கள் நடவடிக்கையும் எடுத்துவருகிறோம்” என்கிறார் மலையமான்.