எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? இந்தக் கேள்வியைக் கேட்காதவர்களே உலகத்தில் இல்லை எனலாம்.
‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே” என்று ஒரு பாடல்.
இந்தப்பாடலை பெரும்பாலானோர் ரசிக்கிறார்கள். பலர் அந்தப்பாடலின் வரிகளில் தன்னைப் பொருத்திப் பார்க்கிறார்கள். சிலர் தன்னுடைய வாழ்க்கையையே கவிஞர் பாட்டாக எழுதியிருக்கிறாரே என்று ஆச்சரியப்படுகிறார்கள்.
உண்மை என்னவென்றால் நம்மில் பலர் ஒரே பாதையில்தான் பயணிக்கிறோம், ஆனால் இன்னொருவரைப் பார்த்து அவர் நன்றாக இருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறோம்.
அவரோ நம்மைப்பார்த்து இவருக்கென்ன கவலை என்று நினைத்துக் கொள்கிறார்.
ஏழைக்கு ஒரு கவலை என்றால் பணக்காரருக்கு இன்னொரு கவலை. இல்லாதவனுக்கு இல்லையே
என்ற கவலை. இருப்பவனுக்கு நமக்குப்பின் நாம் சம்பாதித்தது என்ன ஆகுமோ என்ற கவலை.
இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு கவலை.
ஆளுபவனுக்கும் கவலை உண்டு. ஆளப்படுபவனுக்கும் கவலை உண்டு.
டேவிட் என்னும் ராஜாவைப்பற்றி தெரியாதவர்கள் இருக்கமுடியாது.
அவர் கோலியாத் என்னும் ராட்சதனைக் கொன்றதாக பாடத்தில் படித்திருக்கலாம் அல்லது கேள்வியாவது பட்டிருக்கலாம்.
இஸ்ரேல் என்னும் நாட்டை அவர் ஆட்சி செய்தார், அவரை நாம் ஒரு ராஜாவாகப் பார்க்கலாம்.
ஆனால் அவரது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை நீங்கள் அறிந்தால் நாம் எவ்வளவோ பரவாயில்லை என்று நினைப்பீர்கள்.
அப்பாவுக்கு கடைசிப் பிள்ளை அவர். செல்லப்பிள்ளை என்று நீங்கள் நினைப்பீர்கள், ஆனால் அப்பாவுக்கு மகன் பெயர் கூட ஞாபகம் இருக்காது. மற்றப்பிள்ளைகளை ராணுவ வேலைக்கு அனுப்பியவர், டேவிடை மட்டும் ஆடு மேய்க்க அனுப்பினார்.
பாட்டுப்பாடிக்கொண்டே ஆடு மேய்ப்பார் டேவிட். ஆட்டைத்தூக்க சிங்கம் வருகிறதா, புலி வருகிறதா என்று பார்க்க வேண்டும். ஆடு போனால் அப்பா உதைப்பார். அப்பாவின் அன்பு கிடைக்காமல் காட்டில் ஆடு மேய்த்தே இளமைக்காலம் கடந்து போனது.
கோலியாத்தை ஜெயித்தால் மகளைக் கட்டித்தருவேன் என்ற ராஜா ஏமாற்றிவிட்டார். மனதுக்குள் நேசித்த பெண்ணை மற்றொருவனுக்கு கட்டிக்கொடுத்து விட்டார்.
இப்படியே சோகத்திலும் வெறுமை உணர்விலும் காலங்கள் கடந்துபோயின.
ஒரு நாள் இஸ்ரேல் மக்களின் இரண்டாவது ராஜாவாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைக்கு ஆரம்பித்தது இன்னொரு தொல்லை.
ஏற்கனவே ராஜாவாக இருந்த சால், டேவிடைத் துரத்தத் தொடங்கினார். டேவிட் ஓடினார், ஓடினார், வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினார்.
எப்போது எதிரி வருவான், எப்போது கொல்லுவான் என்று பயந்து பயந்து பல நாட்களைக் கழித்தார்.
ஒரு நாள் இருந்த உணவெல்லாம் காலியாகிவிட்டது. ஒரு செல்வந்தனிடம் உணவு கேட்டார். அவனோ கேவலமாகப் பேசி அனுப்பிவிட்டான்.
இப்படியே அலைந்து திரிந்து ஒரு நாள் எப்படியோ ஆண்டவன் அருளால் சிங்காசனத்தில் உட்கார்ந்து விட்டார்.
சரி அப்போதாவது நிம்மதியாக வாழ முடிந்ததா என்றால், இல்லை. அவரது மகன்களிலொருவனுக்கு ராஜாவாக ஆசை வந்து விட்டது. இப்போது அவன் துரத்தினான்.
மீண்டும் டேவிட் ஓடினார். கடைசியாக படைத்தளபதி ஒருவர் அந்த மகனைக் கொல்ல அதன் பிறகு மீண்டும் ராஜா நாட்டுக்குத் திரும்பினார்.
கொஞ்ச நாள் சிங்காசனத்தில் உட்கார்ந்திருப்பார், பக்கத்து நாட்டுக்காரன் போருக்கு வருவான்.
அவனை ஜெயித்து விட்டு வந்தால், அடுத்த எதிரி வருவான். அடுத்தது அவனுடன் போருக்குப் போகவேண்டும். இப்படிப் போராடிப் போராடியே வாழ்க்கையில் இன்னொரு பாதி போய் விட்டது.
சரி வயதானாலாவது நிம்மதியாக இருக்க முடிந்ததா, அதுவும் இல்லை. மீண்டும் பிள்ளைகள் அப்பாவின் நாற்காலிக்கு சண்டையிடத் தொடங்கினார்கள். அவர்களையெல்லாம் சரிக்கட்டி மகன் சாலமோனை சிம்மாசனத்தில் உட்கார வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
பார்த்தீர்களா, ஒரு ராஜாவுக்கே இந்த நிலைமை என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம். பைபிளில் ஒரு வார்த்தை உண்டு. அது சொல்கிறது. எல்லா மனிதருக்கும் ஏற்படுகிற கஷ்டம் தான் உங்களுக்கும் என்று. எனவே எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்பதற்கு முன் டேவிடைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
ஏனென்றால் அதே பைபிளில் இன்னொரு வார்த்தையும் எழுதியிருக்கிறது, கவலைப்படாதீர்கள் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்று. எனவே கவலைப்படாதீர்கள், ஒரு நாள் நமக்கும் விடிவுகாலம் வரும். நம்பிக்கையுடன் காத்திருங்கள்.