சிங்கத்தின் கூண்டில் சிக்கிய நபர்: திக் திக் நிமிடங்கள்

இந்திய மாநிலம் கேரளாவில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில், சிங்கத்தின் கூண்டுக்குள் சிக்கிய நபரை உயிருடன் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள வனவிலங்கு காப்பகத்துக்கு இன்று காலை முருகன் என்பவர் சென்றுள்ளார்.

அங்கு ஒரு பெண் சிங்கம் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு அவர் சென்றுள்ளார். சுமார் 11 மணியளவில் ஐந்தடி உயரமுள்ள தடுப்பு வேலியை தாண்டி குதித்த அவர், முழங்காலிட்டு தவழ்ந்தவாறு சிங்கம் சுற்றித்திரியும் இடத்தை நோக்கி முன்னேறிச் சென்றுள்ளார்.

இதை கண்ட இதர பார்வையாளர்கள் கூச்சலிட்டனர். அவர்களின் சப்தத்தை கேட்ட வனவிலங்கு காப்பக பாதுகாவலர்களில் சிலர் அங்கிருந்த கிரேசி என்ற 3 வயது பெண் சிங்கத்தின் கவனத்தை திசை திருப்பினர்.

அதேவேளையில், வேறு சில பாதுகாவலர்கள் முருகனை குண்டுக்கட்டாக தூக்கிவந்து பாதுகாப்பான இடத்தில் சேர்த்தனர். இந்த பரபரப்பான நிமிடங்களை பார்வையாளர்களில் சிலர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

பாதுகாவலர்களால் மீட்கப்பட்ட பின்னர் முருகனை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். முருகன் மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் காணப்படுவதாக அங்கிருந்த சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபர் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் திடீரென்று சில நாட்களாக காணாமல் சென்றுள்ளார் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.