பிரதமருக்காக கழுத்தை வெட்டிகொள்ளவும் தயார்!! – தேரர்கள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஓர் திருடர் என நிரூபித்தால் காலி முகத்திடலில் பகிரங்கமாக எனது கழுத்தை வெட்டிக்கொண்டு உயிரை விடுவேன் என தேசிய அறிஞர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் அபன்வெல ஞானாலோக தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகள் தொடர்பாக தமது நிலைப்பாட்டினைத் தெரிவிக்கும் வகையில் தேசிய அறிஞர்கள் ஒன்றியம் நேற்று (புதன்கிழமை) கொழும்பில் நடத்திய விஷேட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பொதுஜன பெரமுனவில் உள்ள இனவாதிகள் பிரதமர் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர், எனினும் அவர் நேர்மையானதோர் தலைவர் என்பது மக்களுக்குத் தெரியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ரணில் தனியானவர் அல்ல அவரைக் காப்பாற்ற அனைத்து பௌத்த அமைப்புகளும், அறிஞர்களும், புத்திஜுவிகளும் ஒன்றான இணைந்து எப்போதும் நிற்போம் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கின்றோம் எனவும் ஞானாலோக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று குறித்த ஊடகசந்திப்பில் தேசிய அறிஞர்கள் ஒன்றியத்தின் உபதலைவர் சீலரதன தேரர் கருத்து வெளியிடும் போது, தற்போது நாட்டில் உள்ள அசாதாரண அரசியல் சூழ்நிலை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ போன்ற கொலைகாரர்களுக்கும், ஊழல்வாதிகளுக்கும் ஒருபோதும் நாட்டை மீண்டும் ஒப்படைக்க மாட்டோம் எனக் குறிப்பிட்ட சீலரதன தேரர், அதற்கு எதிராக எப்போதும் நிறபோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, பிரதமர் மற்றும், ஜனாதிபதி ஆகியோர் நேர்மையான தலைவர்கள் அவர்கள் தற்போதுள்ள குழப்ப நிலையைப் முடிவுக்கு கொண்டு வருவதோடு, இருவரும் இணைந்து நாட்டை சீரான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாகவும் சீலரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.