தமிழீழம் மஹிந்தவால் மலருமா? ரணிலால் மலருமா? சம்பந்தனிடம் கேள்வி

தாமரை மொட்டினூடாகவே தமிழீழம் மலரும் என்ற இரா. சம்பந்தனின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியினால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழிநடத்துகின்ற மொட்டுக் கட்சியினூடாகவே தமிழீழம் மலரும் என்று அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

இதன்மூலம் இரா. சம்பந்தன் மஹிந்த அணிக்கு சிறந்த சான்றிதழ் ஒன்றை வழங்கியுள்ளார்.

2009 தொடக்கம் 2015ஆம் ஆண்டுவரை வடக்கில் துப்பாக்கிச்சூடு இடம்பெறவில்லை. வடக்கில் புலிகளது கொடிகளை உயர்த்தி மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கவில்லை. பேருந்து குண்டுவெடிப்புக்கள் இடம்பெறவில்லை.

ஆனால் இவை அனைத்தும் தற்போது இடம்பெறுகையில் உலகம் முழுவதிலும் தமிழீழம் என்ற கோசம் எழுந்துள்ள நிலையில் இந்த அரசாங்கம் மீது சம்பந்தன் விரல் நீட்டவில்லை.

அப்படியிருக்கையில் எங்களுக்கே சம்பந்தன் சிறந்த சான்றிதழை வழங்கியுள்ளார் என்றார்.

ஈழப் பயணத்தின் முக்கிய இடங்களான 2001ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் மற்றும் சுய உரிமை யோசனைகளை முன்வைத்தது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆவார்.

அதேபோல சமஸ்டி தீர்வோடு புதிய அரசியலமைப்பை முன்வைத்ததும், ஈழத்துடன் தொடர்புபடும் அதிவேக பாதை யோசனையை முன்வைத்ததும் ரணில் விக்ரமசிங்கதான்.

ஆகவே ரணிலின் செயற்பாட்டினால் தமிழீழம் மலரும் என்று இரா. சம்பந்தன் ஏன் கூறவில்லை.

விடுதலைப் புலிகள் காலத்தில் தமிழ்ச் செல்வனை மாதந்தோறும் சந்தித்து இயக்கத்தின் தெற்கு மற்றும் சர்வதேச பேச்சாளராக இருந்தவர்கள் சம்பந்தனும், சுமந்திரனுமே.

தமிழீழம் மலர்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழியமைத்தார் என்பதை சம்பந்தன் எப்போதாவது கூறியுள்ளாரா? எனவும் கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.