கூட்டமைப்பின் வாக்குகள் சிதறுவதற்கு காரணம்?

கூட இருந்து குழி பறிப்பவர்களும், அற்ப காரணங்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துபவர்களும் இம்முறை அதன் வாக்குகள் சிதறுவதற்குக் காரணமாக இருந்துள்ளனர். இவர்களைக் களையெடுத்தால் எல்லாம் சரியாகி விடும்.

இதேவேளை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளால் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் நிலநடுக்கத்தை அனுபவித்துள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை நகைப்புக்கிடமானது. அவர் நிலநடுக்கத்தை அனுபவிக்கவில்லையென்பது மட்டும் தௌிவாகத் தெரிகின்றது.

இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார், விக்னேஸ்வரனைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

ஒரு நல்லெண்ண அடிப்படையில் தாம் முதலமைச்சரைச் சந்தித்ததாகவும், தேர்தல் வேளையில் அவர் வௌியிட்ட அறிக்கைகளுக்காக நன்றி கூறியதாகவும், மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகவும், தாம் இருவரும் பேசியதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரனின் உள்நோக்கத்தை இந்தச் சந்திப்பின் மூலமாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.

கூட்டமைப்பின் தொண்டர்களைப் பொறுத்தவரையில் உள்ளூராட்சித் தேர்தலின் பின்னரான அரசியல் சூழ்நிலை அவர்களைப் பெரிதும் பாதித்து விட்டது.

கஜேந்திரகுமார் போன்றவர்கள் ஆணவத்துடன் பதில் கூறும் அளவுக்கு கூட்டமைப்பு கீழிறங்கி நிற்பதும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

உள்ளூராட்சித் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றிய போதிலும் கூட்டமைப்பினால் ஆட்சியமைக்க முடியாததொரு அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளதும் அவர்களை வேதனைக்குள் தள்ளிவிட்டது.

தமக்கு எதிராகப் பலர் ஒன்று சேர்ந்து நிற்பதை கூட்டமைப்பு முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எந்தச் சவாலையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவுக்கு அடிமட்டத்திலிருந்து கூட்ட மைப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பாகத் தொண்டர்களின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு வியூகங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

தமிழர்களின் உரிமைக்காகப் போராடும் கூட்டமைப்பிற்காக மற்றவர்களிடம் பேரம் பேசுவதை அந்த அமைப்பின் தொண்டர்கள் ஒரு போதுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கூட்டமைப்பின் கௌரவம் பேணப்படுவதையே அவர்கள் பெரிதாக நினைக்கின்றனர். அதுமட்டுமல்லாது உள்ளூராட்சித் தேர்தல் போன்று மாகாணசபைத் தேர்தலிலும் நடந்துவிடக் கூடாதென அவர்கள் நினைக்கின்றனர்.

மாகாணசபைத் தேர்தலும் கடுமையான சவால்கள் நிறைந்ததாகவே அமையப் போகின்றது. குறிப்பாக விக்னேஸ்வரன் போன்றவர்களும் கூட்டமைப்புக்கு எதிராகக் களமிறங்குவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பதவிகளுக்காகக் கொள்கைகளை விட்டுக் கொடுக்கின்ற பிழையான முடிவுகளை கூட்டமைப்பு தவிர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகையதொரு நிலைப்பாடு அதன் எதிர்காலத்தைப் பாழாக்கி விடுமென்பதையும் கூட்டமைப்புத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.