பெற்றோரின் எச்சரிக்கையையும் மீறி, ஊர் சுற்றித் திரிந்த பதினான்கு வயது நிரம்பிய மாணவியொருவரை, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் பெண் பொலிஸாரின் துணையுடன் கைது செய்து, பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் செய்திருந்தனர்.
நீதிபதி நயந்த சமரதுங்க அம்மாணவியை, எதிர்வரும் 14 ஆம் திகதி வரை பண்டாரவளையிலுள்ள சிறுமிகள் காப்பகமொன்றில் தடுத்து வைக்கும்படியும், அன்றைய தினம் இம்மாணவி குறித்த பூர்வாங்க அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படியும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் மற்றும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இம்மாணவி பாடசாலைக்கு செல்வதாகக் கூறி, கடந்த ஒரு வருடமாக பாடசாலைக்கு செல்லாமல் ஊர் சுற்றித் திரிந்துள்ளார். மாணவி பாடசாலைக்கு வராமை குறித்து அதிபர், ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோரிடமும் வினவியுள்ளனர். இதனையடுத்து பெற்றோர் மாணவியைக் கண்டித்தும் எச்சரித்தும் எப்பயனும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இது தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டது.
இதன்பின்னரே, இம்மாணவி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட் டிருந்தமை குறிப்பிடத்தக்கது.