அந்த அழகுப் பெண் பெயர் அருணா . நெல்லை மாவட்டம் கழுகுமலை சொந்த ஊர். அப்பா இல்லை.
அம்மா, ஒரு அண்ணன் கதிரேசன், ஒரு பாட்டி இவர்கள் தான் அருணாவிற்கு உறவுகள். அருணா படிக்கும் காலம் தொட்டே படு சுட்டி.
பிளஸ் ஒன் வரை படித்தாள். இரண்டு பாடங்கள் பெயில் ஆனதால் படிப்பிற்கு மூட்டை கட்டினாள்.
யாரவது கேட்டால் எனக்கு பாடம் சொல்லிக் கொடுக்கற அளவிற்கு நம்ம ஊர் வாத்தியார்கள் ஒர்த் இல்லை என்று பொளேர் அடி கொடுப்பாள்.
எப்போதும் ஈசல் போல சுற்றிக் கொண்டே இருப்பாள். தீப்பெட்டி கம்பெனி வேலைக்குப் போவாள். இவள் போனதும் அந்த தீப்பெட்டி கம்பெனியே சுறுசுறுப்பாக மாறிவிடும்.
எல்லோரையும் முறை வைத்து அழைப்பாள். மாமா, கொழுந்தனாரே, மதினி, பெரியண்ணே, என்று அனைவரையும் கட்டிப் போட்டு விடுவாள்.
அவளுக்கு ஒரே ஒரு குறை இருந்தது. அது அவளின் நிறம். நல்ல கருப்பு நிறம், சிறித்தால் பற்கள் மட்டும் பளீர் வெண்மையில் ஜொலிக்கும்.
அவளுக்கு கல்யாணம் செய்து வைக்க பாட்டி கட்டாயம் செய்யவே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். காரணம் அண்ணன் தனது கல்யாணத்திற்கு அவசரப்படுத்தினான்.
ஆனால், தங்கை இருக்கும் போது தான் கல்யாணம் செய்தால் ஊர் ஒரு மாதிரி பேசும் என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமை காத்தான் கதிரேசன்.
ஒன்றுக்கு பல மாப்பிள்ளைகள் வந்து பார்த்தார்கள். சொல்லிவைத்த மாதிரி எல்லோரும் சொன்னது, பெண்ணை பிடித்திருகிறது. ஆனால் அட்டைக் கரி போல கருப்பாக இருக்கிறாள் என்று நழுவிப் போனார்கள்.
படு ஜாலியான சுபாவம் கொண்ட அருணா மெல்ல மெல்ல மன உளைச்சலுக்கு ஆளானாள்.
அவளின் கலகலப்பு காணாமல் போனது. அண்ணன் அவசரப்படுத்தவே மீண்டும் மீண்டும் மாப்பிள்ளைகள் தேடினார்கள்.
ஆனால், அவளின் கருப்பு நிறம் அவளது திருமணத்திற்கு பெரும் தடையாக இருந்தது. தீப்பெட்டி கம்பெனிக்கு நடை பிணமாகச் சென்று வந்தாள்.
பார்ப்பவர்களை எல்லாம் என்னை கட்டிக்கோடா என்று பிதற்ற ஆரம்பித்தாள். கட்டிக்க கூட வேணாம் என்ன வப்பாட்டியா வச்சுக்கோடா என்றாள்.
எல்லோரும் பரிதாபப்பட்டார்கள். உடன் வேலை செய்த பெண்கள் நான் ஆம்பளையா இருந்தா உன்னைக் கட்டிக்குவேண்டி என்றார்கள்.
கம்பெனிக்கு போவதையும் நிறுத்திக் கொண்டாள் அருணா. முடங்கிப் போனாள். கண்ணாடியை எடுத்து வைத்துக் கொண்டு எப்போதும் முகத்தை பார்த்து அழுதாள்.
ஒரு நாள் அண்ணனுக்கும் அருணாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அது பெரிய சண்டையாக மாறியது. அம்மா அழுது கொண்டிருந்தாள். பாட்டி இருவரையும் திட்டினாள்.
அண்ணன் கதிரேசன் ஆத்திரத்தில் அந்த வார்த்தையை கூறினான். “இவ்வளவு கருப்பா பொறந்து என் வாழ்க்கையையும் சேர்த்து ஏண்டி சாகடிக்கிறே, செத்து தொலை. நானாவது நிம்மதியா இருப்பேன்” என்றான்.
நொறுங்கிப் போனாள் அருணா. கதறி அழுதாள். அவளை பாட்டியால் சமாதானம் செய்ய முடியவே இல்லை.
அண்ணன் சண்டை போட்டு விட்டு வெளியே போய் விட்டான். அன்று இரவு மெல்ல எழுந்தாள் அருணா.
கெரசின் கேனில் நிறைய கெரசின் இருந்தது. எடுத்துக் கொண்டாள். தானே தயாரித்த தீப்பெட்டி ஒன்றை எடுத்துக் கொண்டாள் கொல்லைப் புறம் சென்றாள்.
அவ்வளவு கெரசினையும் தலை வழியாக ஊற்றினாள். பற்ற வைத்துக் கொண்டாள். அலறினாள்… கிராமமே கூடியது.
கதறிய படி ஓடி வந்தான் கதிரேசன். மருத்துவமனையில் சாகும் முன்பு அண்ணனிடம் மெல்ல முனகினாள்.
“அண்ணே நீயுமா….”என்ற தங்கை அருணா இறந்து போனாள். தீயில் வெந்த அருணா கருப்பாக இல்லை..வெள்ளையாக இருந்தாள். இறந்தாள்.
‘அண்ணே நீயுமா?’ என்ற தங்கையின் வார்த்தை அவன் வாழ்க்கையையே கிழித்துப்போட்டது. அண்ணன் கல்யாணம் முடித்துக் கொள்ளவே இல்லை. பாட்டி அருணா இறந்த துக்கத்தில் செத்துப் போனாள்.
அம்மா நடை பிணமாக கழுகுமலை தேரடித்தெருவில் இப்போதும் சுற்றிக் கொண்டிருகிறாள்.
வெள்ளை என்பது அழகல்ல. நிறம்.
வேறென்ன சொல்ல…?