ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக அனைத்துலக காவல்துறையின் சிவப்பு ஆணை (Red Warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிகாரிகளின் கோரிக்கைகளை அடுத்து, அனைத்துலக காவல்துறையின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
மிக் போர் விமானக் கொள்வனவில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வரும் சிறிலங்கா காவல்துறையினர், உதயங்க வீரதுங்கவுக்கு அழைப்பாணை விடுத்திருந்தும், அவர் விசாரணைகளுக்கு முன்னிலையாகாத நிலையில் நீதிமன்றத்தின் ஊடாக இந்த அனைத்துலக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உதயங்க வீரதுங்க கடந்த 4ஆம் நாள் டுபாய் வழியாக அமெரிக்கா செல்ல முயன்றபோது, தடுத்து நிறுத்தப்பட்ட போதிலும், அனைத்துலக காவல்துறையின் சிவப்பு ஆணை பிறப்பிக்கப்படாததால், அவரை கைது செய்து சிறிலங்காவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.