திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது ஆண், பெண் ஜாதகத்தில் யோனி பொருத்தம் ரஜ்ஜுப் பொருத்தம் அவசியம் இருக்க வேண்டும். இந்து மதத்தில் திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது.
திருமணத்திற்கு பொருத்தம் பார்த்து திருப்தியாக இருந்தால் மட்டுமே பெண் பார்க்க வரச்சொல்லும் காலமாகிவிட்டது. 10 பொருத்தமும் சரியாக பொருந்தி வந்திருக்கு என்பார்கள். கூடவே ஜாதக கட்டமும் சரியாக இருக்கிறதா என்று அவசியம் பார்க்க வேண்டும்.
தினம், கணம், மகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி,வசியம், ரஜ்ஜூ, வேதை ஆகியவை 10 பொருத்தங்களாக குறிப்பிடப்படுகின்றன. 10க்கு 8 பொருத்தம் சரியா இருக்கு, 7 பொருந்தி வந்திருக்கு என்று கூறுவார்கள். ஆனால் முக்கியமான பொருத்தங்கள் சரியாக வராவிட்டால் திருமணம் செய்து வைப்பது சரியாக வராது. தவிர்க்கவே கூடாது தினம், கணம், யோனி,ராசி,ரஜ்ஜு, வசியப்பொருத்தம் அவசியம் இருக்க வேண்டும்.
இதில் மிக மிக முக்கியமாக தவிர்க்க இயலாத – தவிர்க்கக் கூடாத பொருத்தமான இரண்டு உண்டு. ஒன்று யோனிப்பொருத்தம் மற்றொன்று ராஜ்ஜூப் பொருத்தம். இந்த இரண்டில் எந்தப் பொருத்தம் ஒன்று இல்லை என்றாலும் திருமணம் செய்யக்கூடாது. எனவே இவை இரண்டு பொருத்தமும் வாழ்விற்கு உயிர்நாடியாக இருக்கும் பொருத்தம் ஆகும்.
பாசமான தம்பதியர்
தம்பதியர் இருவருமே ஆரோக்கியத்துடன வாழ தினப்பொருத்தம் அவசியம். அதே போல குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு, பாசம் எப்படி இருக்கும்? சயன, சுக,போக பாக்கியத்தை இருவரும் அனுபவிக்க கணப்பொருத்தம் இருக்க வேண்டும். குடும்ப ஒற்றுமைக்காகவும், உறவினர்களிடையே எந்தவித கருத்து வேறுபாடும் இன்றி ஒற்றுமையாக இருப்பதற்கு ராசிப்பொருத்தம் இருக்க வேண்டும்.
வசியம் இருக்கா?
தம்பதிகளிடையே உறவு மனைவிக்கிடையே உள்ள ஈர்ப்பு,அன்பு ஆகியவை குறித்து அறிவது வசியப் பொருத்தம் என அழைக்கப்படுகிறது.வசியப் பொருத்தம் சிறப்பாக இருக்கும் தம்பதிகளுக்கு இடையே தாம்பத்ய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.
தாம்பத்திய சுகம்
மணமக்கள் தாம்பத்ய உறவில் திருப்திகரமாக இருப்பார்களா? என்பது யோனிப் பொருத்தம் மூலம் கணிக்கப்படுகிறது. கணவன் மனைவியின் சேர்க்கை, தாம்பத்ய உறவின் சுகம் மற்றும் திருப்தி நிலை ஆகியவற்றை குறிப்பது யோனி பொருத்தம். இது முக்கியமான ஒன்றாகும். தாம்பத்ய உறவின் சுகம், திருப்தி நிலை இவற்றை தீர்மானிக்கும் அளவுகோள் எனலாம். ஆண், பெண் யோனி நிலையை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் முறை இது. நட்சத்திரங்கள் 13 மிருகங்களாக ஆண் பெண் என பிரிக்கப்பட்டு உள்ளது.
பகை இணைக்கக் கூடாது
ஆணிற்கு ஆண் மிருகமும், பெண்ணிற்கு பெண் மிருகம் எனினும் உத்தமே! பெண்ணிற்கு ஆண் மிருகமும், ஆணிற்கு பெண் மிருகம்’ என்றாலும் உத்தமமே. பகை மிருகம் மட்டும் சேர்க்கக்கூடாது. மற்ற பொருத்தம் எத்தனை இருந்தாலும் இது முக்கியம். பெண் நட்சத்திரம் கார்த்திகை, அதன் மிருகம் பெண் ஆடு. ஆண் நட்சத்திரம் சதயம், அதன் மிருகம் பெண் குதிரை. இவை இரண்டும் பகை பெறாததால் யோனிப் பொருத்தம் உண்டு.
குழந்தை பேறு எப்படி?
திருமண வாழ்க்கையின் அடுத்தகட்டமான குழந்தை பேறு குறித்து கணிக்கப்படுவதுதான் மகேந்திரப் பொருத்தம் என அழைக்கப்படுகிறது. குலம் விருத்தி அடையவும், புத்திரபாக்கியத்திற்காகவும் இந்த பொருத்தம் கண்டிப்பாக அவசியம் இருக்கவேண்டும். எத்தனை பொருத்தம் இருந்தாலும் தம்பதியரிடையே மனப்பொருத்தம் இல்லாவிட்டால் அந்த திருமணம் கசந்து முறிந்து விடுகிறது இதற்குக் காரணம் அவர்களின் முன்வினைப் பயன் என்று கூறுவதைத் தவிர வேறொன்றும் இல்லை.