இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் இறுதி டி-20 போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. தொடரில் இரு அணிகளும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றநிலையில், இது கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும் போட்டி என்பதால் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. காயம் காரணமாக இந்தப் போட்டியில் கேப்டன் கோலி விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ரோஹித் ஷர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றார். டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியை பேட்டிங் செய்யப் பணித்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, தவான் களமிறங்கினார்கள்.
வழக்கம்போல ரோஹித் ஷர்மா (11 ரன்) சீக்கிரம் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ரெய்னா, தவானுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடி ரெய்னா 43 ரன்களில் (27 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்ஸர்) பெவிலியின் திரும்பினார். சிறிது நேரத்தில் தவானும் (47 ரன்கள்) அவுட்டானார். அதன்பிறகு நடுவரிசை வீரர்கள் சொதப்பினார்கள். எதிர்பார்க்கப்பட்ட தோனி 12 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றமளித்தார். 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றக் கணக்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. ஹெண்ட்ரிக்ஸ் 7 ரன்களில் வீழ்ந்தார். டுமினி (55 ரன்), கிறிஸ்டியன் ஜோங்கர் (49 ரன்கள்) எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். பெகார்டியன், ஜோங்கர் களத்திலிருந்தனர். முதல் பந்தில் ஒரு ரன் வர, இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு விளாசினார் பெகார்டியன். இதனால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. எனினும் அடுத்தடுத்த பந்துகளை சிறப்பாக வீசி ரசிகர்கள் மனதில் பால்வார்ததார் புவனேஸ்வர் குமார். கடைசி பந்தில் ஜோங்கர் அவுட்டானார். இறுதி வரை ஆடிய தென்னாப்பிரிக்க அணியால் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களே எடுக்க முடிந்தது.
இதன்மூலம் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி-20 கோப்பையை தனதாக்கியது. தென்னாப்பிரிக்க பணத்தை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது இந்தியா. ஆட்ட நாயகன் விருது சுரேஷ் ரெய்னாவுக்கும், தொடர் நாயகன் விருது புவனேஷ்வர் குமாருக்கும் வழங்கப்பட்டது.