யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டில், தனது ஊழியரை வைத்து முதலமைச்சர் செருப்பு காவ வைத்தார் என்ற தகவல் தீயாக பரவி வருகிறது. உண்மையில் நடந்த சம்பவம் என்ன? அந்த கூட்டத்தில் வேறென்ன சுவாரஸ்யங்கள் நடந்தன?
இன்றைய கூட்டம் அதிகமும் முதலமைச்சருக்கு பின்னால் நிற்கும் கட்டுரை எழுதுபவர்களாலேயே நிறைந்திருந்தது. மேடை முழுக்க முதலமைச்சரை துதி பாடுவதிலேயே குறியாக இருந்தனர்.
முதலமைச்சர் ஒரு அதிகார மையமாக உருவெடுத்தால், அவரை அண்டி செயற்படலாமென அந்த ஆய்வாளர்கள் கருதியிருந்தது, அவர்களின் பேச்சு, செயலில் தெளிவாக தெரிந்தது.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய நிலாந்தன், அரசியல் தலைவர்கள் முடிவுகள் எடுக்கும்போது தங்களை கலந்துரையாடுவதில்லையென நிமிடத்திற்கொரு முறை குறைபட்டார். இனியாவது அரசியல் தலைவர்கள் முடிவுகளை எடுக்கும்போது அரசியல் கட்டுரை எழுதும் தன்னை போன்றவர்களுடன் தொடர்புகொண்டு பேச வேண்டுமென்ற சாரப்படவே உரை முழுவதும் நிகழ்த்தினார்.
முதலமைச்சர் அடுத்த தலைவர், விரைவில் கட்சி ஆரம்பிப்பார் என்றும் உசுப்பேற்றிவிட, முதலமைச்சர் புன்முறுவலுடன் உட்கார்ந்திருந்தார்.
பின்னர் உரையாற்ற வந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், தனது காலணியை இருக்கைக்கு பக்கத்திலேயே கழற்றிவிட்டு வந்துவிட்டார். ஒலிவாங்கி மேடையில் ஏறிய பின்னர்தான், காலணியின் தேவையை உணர்ந்தோ என்னவோ, பக்கத்தில் நின்ற தனது உதவியாளரை பார்த்து, “அதை கொஞ்சம் எடுத்து தர முடியுமா?“ என கேட்டார்.
“ஓம் சேர்“ என்றபடி உதவியாளர் காலணியை கையில் எடுத்து வந்து, முதலமைச்சரின் காலடியில் வைத்தார்.
தமிழ் அரசியல் ஆய்வு நூலாக இந்த புத்தக வெளியீட்டில், மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், கஜதீபன் போன்ற கீழ்நிலை பிரமுகர்கள் ஓரிருவர் மட்டுமே கலந்துகொண்டிருந்தனர்.
நூல் வெளியீட்டை ஒழுங்கமைத்திருந்த நிலாந்தனின் ஆங்கில கல்வி நிறுவனத்தில் கல்வி கற்பவர்கள்தான் அழைத்து வரப்பட்டு, அரங்கை நிரப்பப்பட்டிருந்தனர்.
இலங்கையை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு தற்போது இந்தியாவில் வசித்து வருகிறார். சில மாதங்களின் முன் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றியபோது, 2019 இல் தமிழீழம் மலருமென அரசியல் ஆய்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.