ஸ்ரீதேவியின் உயிரை பறித்த Cardiac Arrest என்பது?

நடிகை ஸ்ரீதேவி இதயத்துடிப்பில் ஏற்பட்ட பாதிப்பு (cardiac arrest) காரணமாக உயிரிழந்தார். கார்டியாக் அரெஸ்ட் குறித்த விழிப்புணர்வு பலருக்கும் இல்லாமல் உள்ளது. அது குறித்து காண்போம்

கார்டியாக் அரெஸ்ட் என்றால் என்ன?

இதயநோய் நிபுணர்கள் விளக்கம் அளிக்கையில், இதயத்தின் செயல்பாடு திடீரென நின்றுவிடும் நிலையில், அது கார்டியாக் அரெஸ்ட் எனப்படும்.

இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாயிலோ அல்லது இதயத்திலிருந்து ரத்தம் வெளியேற்றும் குழாயிலோ அடைப்பு ஏற்பட்டால் அல்லது இதயத் தசைகளில் பிரச்னை ஏற்பட்டாலோ இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்படும்.

இதயத்தசைகளுக்கும் ரத்த ஓட்டம் தடைபடுவது, நாட்பட்ட இதயநோய் பிரச்னை இருப்பது, மரபணு ரீதியாக இதய பாதிப்பு ஏற்படுவது போன்றவை இந்த சிக்கலை உருவாக்கும்.

நாட்பட்ட சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களின் இதயச் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட அதிக சாத்தியம் உண்டு. நுரையீரலும் இதயமும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுவது என்பதால் அதன் செயல்பாட்டில் ஏற்படும் தாக்கமும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஆனால், சிறுநீரக கோளாறால் ஏற்படும் இதயநோய் சிக்கலை விட நுரையீரலால் இதயச் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவது குறைவு என விளக்கம் அளித்துள்ளனர்.

மாரடைப்புக்கும். கார்டியாக் அரெஸ்டுக்கும் என்ன வித்தியாசம்?

பொதுமக்கள் மத்தியில் இன்றளவும் மாரடைப்பு (Heart Attack) என்பதும் இதயநிறுத்தம் என்பதும் ஒரே நோயின் அறிகுறிகள் என எண்ணி வருகின்றனர்.

ஆனால், உண்மையில் இரண்டிற்கும் மிக முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

ஒருவரின் இதய தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டமானது திடீரென தடைப்பட்டால் ஏற்படுவது மாரடைப்பு. ஆனால், இந்த சூழ்நிலையிலும் மற்றப்பகுதிகளுக்கு இதயம் ரத்தத்தை அனுப்பிக்கொண்டு இருக்கும்.

இந்த நிலையில் நோயாளியால் சுவாசிக்க முடியும். சுயநினைவிலும் இருக்க முடியும்.

மாரடைப்பு ஏற்பட்டு அதற்கு உடனடி சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், இதன் அடுத்தக்கட்டமாக ரத்தத்தை செலுத்தும் பணியை இதயம் நிறுத்தி விடும். இதற்கு பெயர் தான் இதயநிறுத்தம்(Cardiac Arrest).

இந்த நிலையில் நோயாளியால் இயற்கையாக சுவாசிக்கவும் சுயநினைவுடன் இருக்கவும் முடியாது.

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால் அவருக்கு அடுத்த சில நிமிடங்களில் இதய நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

’Heart Attack – Cardiac Arrest: இவ்விரண்டையும் குணப்படுத்த முடியுமா?

மாரடைப்பு மற்றும் இதயநிறுத்தம் என இரண்டுமே ஆபத்தான நிலையாகவே பார்க்கப்படுகிறது.

மாரடைப்பு ஏற்பட்ட நபருக்கு உடனடி சிகிச்சை அளித்து அவருக்கு இதயநிறுத்தம் ஏற்படாமல் தடுத்துவிட்டால் அவரை காப்பாற்றும் வாய்ப்புள்ளது.

அதேசமயம், இதய நிறுத்தம் ஏற்பட்ட நபருக்கு உடனடியாக CPR சிகிச்சை அளித்து சுவாசத்தையும், சுயநினைவையும் திரும்ப பெற்றால் அவரையும் குணப்படுத்த வாய்ப்புள்ளது.

ஆனாலும், இச்சிகிச்சை முறைகள் எல்லா நேரங்களிலும் 100 சதவிகிதம் பலனளிக்காத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்பது கவலைக்குறிய செய்தியாகும்.