செருப்புக்களை வீசி மோதிக்கொண்ட ஓ.பி.எஸ், தினகரன் ஆதரவாளர்கள்!

மதுரை விமான நிலயத்தில் ஓ.பன்னீர்செல்வம்  ஆதரவாளர்களும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

தினகரன் ஆதரவாளர்கள்

தன் பேரனின் காது குத்து விழாவுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர்  சென்றுவிட்டு சென்னை செல்வதற்காக ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையத்துக்கு வந்தார். அவரை வழியனுப்ப மதுரையிலுள்ள அ.தி.மு.கவினர் குழுமியிருந்தனர்.

தினகரன்

அதே நேரம் தினகரனை வழியனுப்ப அவருடைய ஆதரவாளர்கள் திரண்டு வந்திருந்தனர். ஒ.பி.எஸ். வந்த தகவலால், ’அவர் முதலில் போகட்டும்’ என்று ரிங் ரோட்டில் காத்திருந்தார் தினகரன். ஆனால்,  விமான நிலையத்தில் காத்திருந்த தினகரன் ஆட்களை பார்த்து ஒ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஏதோ சொல்ல, பதிலுக்கு தினகரன் ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ்சுக்கு  எதிராக கோஷமிட அங்கு பதற்றம் ஏற்பட்டது.

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை  போலிஸும், அவரது ஆதரவாளர்களும் சூழ்ந்து நின்ற நேரத்தில் தினகரன் ஆதரவாளர்கள், ஓபிஎஸ்ஸுக்கு எதிராக கடுமையான காேஷங்களை எழுப்பினார்கள். இதற்கிடையே ஓ.பி.எஸ்ஸை நோக்கி செருப்பு விழுந்ததாக சொல்லப்பட்டது. இதனால்  அங்கு  பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு தரப்பும் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. காவல் துறையினர் மிகுந்த சிரமத்துக்கிடையே பன்னீர்செல்வத்தை விமான  நிலையத்தினுள் அழைத்து சென்றனர்.

உடனே காவல்துறை அங்கு நின்று கொண்டிருந்த ஓ.பி.எஸ்.ஆதரவாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கலாம். அதைசெய்யாமல் தினகரனை  விமான நிலையத்துக்குள் அனுமதித்துவிட்டார்கள்.  அங்கே மிகுந்த சீற்றத்துடன் நின்றுக் கொண்டிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், தினகரன் ஒழிக என்ற கோஷங்கள் எழுப்ப, அவர்கள் அங்கிருந்து செருப்புகளை வீச, இருதரப்பும்  செருப்புகளை வீசத் தொடங்கினர். “இதை வேடிக்கை பார்க்கிறீர்களா ” என்று, தினகரன் ஆதரவாளர்களுக்கும் பாேலீஸுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. விமான நிலைய வளாகமே போர்க்களமனாது. அதன் பின்னர் பாதுகாப்புடன்  டிடிவி தினகரன் விமான நிலையத்துக்குள்  சென்றார். அவர்கள் சென்றபின்பும் இரு தரப்பும் மோதுவது போன்று அங்கேயே நின்றார்கள்.

“இரு தரப்பும் ஒரே நேரத்தில் பயண நேரத்தை  முடிவு செய்தாலும் அதற்கு தகுந்தாற்போல் பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி.மணிவண்ணன் செய்ய தவறிவிட்டார், தினகரன் மீது தாக்குதல் நடத்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள்” என்றும் தினகரன் ஆதரவாளர்கள் புகார் எழுப்பி வருகிறார்கள்.  இந்த தேவையில்லாத பதற்றத்தை தவிர்க்கும் வகையில் தினகரன் வரவிருக்கும் தகவலை ஓ.பி.எஸ்ஸுக்கு தெரிவித்து அவர் பயணத்தை மாற்றி அமைக்க உளவுத்துறையினர் அலட்சியம் காட்டியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.இவர்கள் சண்டையால் விமானம் நிலையம்  வந்த மற்ற பயணிகள் அரண்டு விட்டார்கள்.