‘முதலில் வேண்டாம்.. இப்போது வேண்டும்’.. எதை நோக்கிச் செல்கிறது மோடி – ட்ரூடோ சந்திப்பு!

இந்திய மண்ணில் தரையிறங்கும் எந்த வெளிநாட்டுத் தலைவரையும் வரவேற்க முந்திச்செல்லும் பிரதமர் மோடி, கனடா பிரதமர் ட்ரூடோவை வரவேற்காதது விமர்சனங்களை கிளப்பியிருந்தது. அயலரசியல் சூழலிலும் இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது குடும்பத்துடன் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி இந்தியா வந்தார். இச்சுற்றுப் பயணத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் விடுமுறையைக் களிக்கத் திட்டமிட்ட ட்ரூடோ, கனடா-இந்தியா அரசியல் சந்திப்புகளையும் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

கைக்கூப்பிய வண்ணம் விமானத்தில் இருந்து இறங்கிய ட்ரூடோவை வரவேற்க விவசாயத்துறை அமைச்சரே நின்றுகொண்டிருந்தார். எவரையும் முன்வரிசையில் நின்று வரவேற்க முனையும் மோடி, ட்ரூடோ வந்திறங்கி சில நாள்களுக்குப் பின்னர் சந்தித்தது ஏன்? மத்திய அமைச்சர்கள் ஏன் ட்ரூடோவைச் சந்திக்கத் தயங்கினார்கள்? இப்படியான ஒவ்வாத நிலைக்கு என்ன காரணம்?

80-களில் பஞ்சாப் மாகாணம் சந்தித்த வன்முறைகளில் தோன்றியது, இப்பிரச்சனைகளுக்கான மையச்சரடு.
1984ல் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து வெடித்த கலவரத்தில் காலிஸ்தான் இயக்கப் போராளிகள் பெரும் அடிவாங்கினார்கள். புது டெல்லியைத் தொடர்ந்து நாட்டின் பலப்பகுதிகளில் பற்றியெரியத் தொடங்கிய வன்முறைத் தீயில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் பலியாயினர். நிலைமை சீரடையத் தொடங்கிய அடுத்தாண்டே, காலிஸ்தான் இயக்க போராளிகளால் கனடாவிலிருந்து மும்பை நோக்கி வந்த ‘ஏர் இந்தியா’ நிறுவன விமானம் தாக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் பெருவாரியான சீக்கியர்கள் புலம்பெயரத் தொடங்கியிருந்தனர். இந்திய வம்சாவழியில் வந்த தனிப்பெரும் சமூகம் ஒன்று லட்சக்கணக்கில் கனடாவை வாழ்விடமாக அமைத்துக் கொண்டதும், அவ்வேளையில்தான்.

நெடுங்காலமாக, சீக்கியப் பிரிவினையாளர்களுக்கு இடமளித்து ஆதரவுக் கொடுப்பது மூலம் சீக்கியப் பிரிவினைவாதத்துக்கு உறுதுணையாக இருப்பதாக கனடாவின் மீது இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது. ஆனால், ட்ரூடோவோ கடைசியாக டொரொன்டோவில் சீக்கிய மதக் கோயில் இயக்கங்கள் (குருத்வாரா) சார்பாக நடந்த ‘கால்ஸா தின’ ஊர்வலத்தில் பங்கேற்றார். இதேவேளையில், இந்திய தூதர்களை கனடாவில் உள்ள சீக்கிய இயக்கங்கள் எந்தவிதப் பொது நிகழ்வுகளிலும் தொடர்ந்து பங்கேற்க விடாதது கவனத்திற்குரியது.

தற்போதைய பிரதமர் ட்ரூடோவின் அமைச்சரவை மற்றும் அரசு அலுவல்களை கவனித்தில் கொண்டோமேயானால், மோடியைக் காட்டிலும் சீக்கியர்களிடம் வெளிப்படையான உறவை தன் அமைச்சகத்தின் மூலம் ட்ரூடோ காட்டிக்கொள்ளத் தவறுவதில்லை. தனது அமைச்சரவையில் நான்கு சீக்கிய-அமைச்சர்களுக்கு இடமளித்துள்ளார். இனவாரியான வாக்கு-அரசியல் எனும் விதத்தில் ட்ரூடோவின் அரசு ஆட்சியமைக்க ‘சீக்கியர்கள்’ வாக்கும் ஆதரவும் மிக முக்கியம்.

ட்ரூடோ, trudeau

கடந்த ஆண்டு, ட்ரூடோவின் சீக்கிய அமைச்சர்களின் இந்திய வருகையில், இந்தியரசுடனான உறவில் மற்றுமொரு முறை அதிருப்தியே வெளிப்பட்டது. பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உட்பட இந்திய அரசும் அமைச்சர்கள் வருகையைப் புறக்கணித்தது. கனடா பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹரிஜித் சிங் ஷஜ்ஜன் உடனான சந்திப்பைத் தவிர்த்தது மட்டுமின்றி, இந்திய பஞ்சாப் பகுதிகளை ‘காலிஸ்தான்’ என்று சீக்கியப் பிரவினைக் கோருவோர் மீது கனடா அதிபர் ட்ரூடோ அனுதாபம் வைத்துள்ளதாகக் குறைகூறினார், அமரிந்தர் சிங்.

‘காலிஸ்தான்’ விவகாரத்தால் இந்திய – கனடா இடையே நீண்டகால ஒவ்வாமை நிலைக்கொண்டுவிட்டது.  கனடா அரசானது சீக்கியர்களின் கருத்துரிமை மற்றும் சுதந்திரம் குறித்து எந்தவித கட்டுப்பாடும் தன்னால் விதிக்க முடியாது என்னும் வாதத்தில் நிலைத்திருக்க, இந்திய அரசு சீக்கியப் பிரிவினையாளர்களுக்கு ட்ரூடோ அளிக்கும் ஆதரவை நிறுத்தவேண்டுகிறது. இதன் பிரதிபலிப்பாகவே ட்ரூடோ வருகையைப் புறக்கணித்த படலம் நடந்தேறியதாக கூறப்படுகிறது.

எல்லாவற்றையும் தாண்டி, கனடா-இந்தியா இடையே நல்லிணக்கம் ஏற்படுவதே ட்ரூடோவின் முயற்சியாகவும் இருக்கும். அதாவது இந்தியாவின் சீக்கியப் பிரிவினைவாத எதிர்ப்பை ஏற்றுக்கொள்வதன் வழியே. ஆனால், கனடா பிரதமரின் இப்பயணம் பிரிவினையாளர்களை கிளர்ந்தெழச் செய்யும் என்று இந்தியரசு கவலையில் ஆழ்ந்துள்ளது.

ட்ரூடோவை பொறுத்தவரை ஏதேனும் ஒரு முடிவை எடுக்க வேண்டியத் தருணமிது. இந்நிலையில்தான், பிரதமர் மோடி, கனடா பிரதமர் ட்ரூடோவை சந்தித்திருக்கிறார். ட்ரூடோவின் குடும்பத்தை மோடி சந்தித்தது வைரலானது. இந்தச் சந்திப்பு எதை நோக்கிச் செல்ல இருக்கிறது என்பதைத்தான் இப்போது உற்று நோக்க வேண்டியிருக்கிறது!