`தோனி, கோலிக்கு ஓய்வு!’ – டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..

இலங்கை, வங்கதேசம் அணிகளுடனான முத்தரப்பு டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Photo Credit: Twitter/BCCI

இலங்கையின் 70-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகளுடனான நிதாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 போட்டி தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறும் இந்த தொடர் வரும் மார்ச் 6-ம் தேதி தொடங்கி, 18-ம் தேதி முடிவடைகிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும், எதிரணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். முடிவில் முதல் 2 இடங்களைப்  பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைப்பளு காரணமாக கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மா கேப்டனாகவும், ஷிகர் தவான் துணைக் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் விரார் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட, ரோஹித் ஷர்மா இந்திய அணிக்குக் கேப்டனாக செயல்பட்டார்.

இந்திய அணி:

ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான் (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், யுஷ்வேந்திர சாஹல், அக்‌ஷர் படேல், விஜய் சங்கர், ஷ்ரதுல் தாக்குர், ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ், ரிஷாப் பாண்ட் (விக்கெட் கீப்பர்).