மும்பை: மாரடைப்பால் துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று இந்தியா கொண்டுவரப்படுகிறது என அவரது கணவர் போனி கபூரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் துபாயில் சனிக்கிழமை இரவு காலமானார். 54 வயதில் திடீர் மாரடைப்பால் ஸ்ரீதேவி மரணமடைந்தது இந்தியு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஸ்ரீதேவியின் மறைவுக்கு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களும் இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடல் நேற்று துபாய் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இது குறித்து பேசிய துபாய் தடயவியல் துறை அதிகாரிகள், ஸ்ரீதேவி முக்கியமான நபர் என்பதால் அவருக்கு விரிவான உடற்கூறு சோதனை நடைபெற்றதாக தெரிவித்தனர். அதனால் உடற்கூறு செய்வதில் தாமதம் ஏற்பட்டது என்றும் அவர்கள் கூறினர்.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடல் இன்று இந்தியா கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்க தாமதமானதால் உடல் இன்று கொண்டுவரப்படவுள்ளதாக போனிகபூரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இன்று மும்பை கொண்டு வரப்படும் ஸ்ரீதேவியின் உடல் திரையுலகினர் அஞ்சலிக்குப் பிறகு இன்று பகல் 12.30 மணிக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.