நாட்டில் நிலவிய அரசியல் குழப்ப நிலை தற்காலிக முடிவுக்கு வந்துவிட்டது. கூட்டு அரசு தொடரும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டதை அடுத்து நிலமை ஓரளவு சமூகமாகியுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்தவின் கட்சி பெற்ற வெற்றியை அடுத்து கூட்டு அரசு நீடிக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.
அரசில் அங்கம் வகிக்கின்ற ஜனாதிபதி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசியலிருந்து விலகுமெனக் கூறப்பட்டதையடுத்து அரசுக்குள் மட்டுமல்லாது முழுநாட்டிலும் அரசியல் குழப்பநிலையொன்று தோன்றியிருக்கின்றது.
கூட்டு அரசில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் இரண்டும் தனித்தனியே ஆட்சியை அமைக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மகிந்தவும், மைத்திரியும் ஒன்றிணைந்து ஆட்சியை அமைப்பதற்கான பேச்சுகளும் இடம்பெற்றன.
இதேவேளை பிரதமரான ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டுமென சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மகிந்த ஆதரவு அணியினர் கடுமையான நெருக்கடியைக் கொடுத்தனர்.
தமது கட்சியைச் சேர்ந்த ஒருவரையே பிரதமர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்பது இவர்களது முதல் கோரிக்கையாகக் காணப்பட்டது. ஜனாதிபதிக்கும் இது தொடர்பாக நெருக்கடி கொடுக்கப்பட்டது. அவர் தர்ம சங்கடமானதொரு நிலைக்குள் தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் எவருமே தம்மைப் பதவி விலக்க முடியாதெனவும் நாடாளுமன்றத்தில் தமக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை நிறைவேற்றுவதன் மூலமாகவே இதனைச் சாதிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
தமக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றக் கூடிய பலம் எதிரணியிடம் இல்லையென்பது பிரதமருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளால் உற்சாகமடைந்த மகிந்த தரப்பினர் தம்மால் எதை வேண்டுமானாலும் சாதித்துவிடலாமென நம்பியிருந்தனர்.எதிர்க்கட்சித் தலைவர் பதவிகூட தமக்கே வழங்கப்பட வேண்டுமென வாதாடினார்.
தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது மகிந்த அணியினர் தோல்வியைத் தழுவியதை இவர்கள் புரிந்து கொள்வதற்கு ஏனோ மறந்து விட்டார்கள்.தேர்தலில் அலங்கரிக்கப்பட்ட வாக்குகளில் சுமார் 44 வீதமானவை மட்டுமே மகிந்தவின் கட்சிக்கு வழங்கப்பட்டது. 56 வீதமானவை எதிராகவே வாங்கப்பட்டது.
வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பு அதிக சதவீதமான வாக்குகளைப் பெற்றதுடன் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகமான உறுப்பினர்களையும் வென்றெடுத்துள்ளது.
இதனுடன் ஒப்பிடும் போது ஏனைய கட்சிகள் பின்தங்கியே நிற்கின்றன.உள்ளூராட்சித் தேர்தல் என்பதாலும், தவறான பரப்புரைகளாலும் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் சிறிது சரிவு ஏற்பட்டாலும் அது தனது தனித்துவத்தை இழந்து விடவில்லை.
ஆனால் அதற்கு எதிரான ஊடகங்கள் சிலவும், எதிரணியினரும் கூட்டமைப்பு தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளதாகத் தொடர்ந்து கூறி வருவதை அவதானிக்க முடிகின்றது.
அடுத்து வரவிருக்கும் மாகாணசபைத் தேர்தலில் இதற்குச் சரியானதொரு பதிலை மக்கள் வழங்கி விடுவார்கள்.
தமிழ்க் காங்கிரசின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எல்லை மீறிய வகையில் கூட்டமைப்புக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். உள்ளூராட்சித் தேர்தலில் தமக்கே வெற்றி கிடைத்துள்ளதாகவும் பெருமிதம் கொள்கின்றார்.
அவ்வாறாயின் எந்தவொரு உள்ளூராட்சி சபையிலும் அவரால் தனித்து ஆட்சியமைக்க முடியாமல் போனது ஏன் என்பது புரியவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு பகிரங்க ஆதரவு கொடுத்து ஒருதலைப்பட்சமாக வடக்கு முதலமைச்சர் செயற்பட்டு வருகிறாரா என்ற சந்தேகம் தமிழ் மக்களிடத்தில் வலுவாகவே ஏற்பட்டுள்ளது.
அவர் கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றதை மறந்து விட்டு இவ்வாறு செயற்படுகின்றமை அவருக்கு இழுக்கைத்தரக் கூடியது.
அவர் சுயேட்சையாக நின்றா போட்டியிட்டு முதலமைச்சருக்கான பதவியில் அமர்ந்து கொண்டார்? இதை அவரால் தெளிவுபடுத்த முடியுமா? அரசியல் என்பது ஒரு சாக்கடை என்பது மிகச்சரியானதொரு கருத்தாகும்.
அதிலும் எமது நாட்டைப் பொறுத்தவரையில் இந்த உதாரணம் நன்றாகவே பொருந்திவிட்டது.
நாட்டின் மோசமான பொருளாதார நிலை, மக்களின் வறுமை, தீராத தலைவலியைக் கொடுத்து வருகின்ற இனப்பிரச்சினை ஆகியவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அரசியல்வாதிகள் தமது எண்ணத்திற்கேற்ப நாடகம் ஆடிக் கொண்டிருப்பது தொடரப்போவதில்லை. மக்கள் இதற்கொரு முடிவைக்கட்டியே தீருவார்கள்.