ஒரு திருநங்கையின் உள்ளக் குமுறல் இது கதை மட்டும் அல்ல. சில திருநங்கைகளின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவமும் கூட. தொடர்ந்தும் ஆழமாக படியுங்கள் அர்த்தம் உங்களுக்கு புரியும்.
எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே, என் அம்மாவின் கண்மை, லிப்ஸ்டிக், மேக்கப் செட் மற்றும் அவரது உடை மற்றும் அலங்கார உபகரணங்களை உடுத்தி, பயன்படுத்தி வருகிறேன். அதாவது எனது ஏழு வயதில் இருந்து நான் இப்படியான செயல்களை செய்து வருகிறேன்.
எப்போதெல்லாம் எனது அப்பா, அம்மா வீட்டில் இல்லையோ அப்போதெல்லாம் நான் என்னையே அலங்கரித்துக் கொள்வேன்.
சமூகம் பெண் என்றால் அழகாகவும், மிருதுவாகவும் இருக்க வேண்டும் என்றும், ஆண் என்றால் வியர்வை சொட்ட, கரடுமுரடாகவும் இருக்க வேண்டும் என்றும் எதிர்ப் பார்க்கிறது.
எனக்கு இதில் சந்தேகம் வலிமையாக இருந்தது. ஒருமுறை அப்பாவிடம் இதை நேரடியாகவே கேட்டேன்… “ஏன்’ப்பா… நீயும் அம்மாவும் சமம் தான? அம்மா பலசாலியா இருந்தா நீ ஒத்துக்க மாட்டியா? அம்மா வியர்வை சொட்ட உழைக்க கூடாதா?
நீ மேக்கப் போட்டுக்க கூடாதா? ஏன்? இந்த ஆண், பெண் வேற்றுமை?” கேள்விக் கேட்டு முடிக்கும் முன்னரே எனது கன்னம் பழுத்துவிட்டது.
அன்று முடிவு செய்தேன்… எனது ஆசைகள் வெளிக்காட்டினால் அடிதான் கிடைக்கும். அதனால், அதை பூட்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்று…
பல நாள் திருடன் ஒருநாள் அகப்பட்டான் என்ற பழமொழிக்கு ஏற்ப… நானும் ஒரு நாள் எனது அப்பாவிடம் சிக்கினேன்.
ஒரு நாள் அலுவலகம் முடிந்து எனது அப்பா சீக்கிரமாக வீடு திரும்பினார். அப்போது நான் பாதி களைந்த கண்மை, லிப்ஸ்டிக் உடன் பேய் படங்களில் வரும் கதாப்பாத்திரம் போல தோற்றமளித்து, அம்மாவின் உடையுடன் நின்றுக் கொண்டிருந்தேன்.
இம்முறை அடியுடன் நிற்கவில்லை. பல அறிவுரைகள், வெளியே தெரிந்தால் மானம் போய்விடும் என்ன பண்ணிட்டு இருக்க என்று திட்டுக்கள், மிரட்டல்களுடன் முடிந்தது.
எனக்கு பெண் போல வேடமிட்டு நடனமாட பிடித்துள்ளது, நான் நாடகங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறினேன். ஆனால், மறுப்பு மட்டுமே என் பெற்றோரிடம் இருந்து பதிலாக வந்தது.
ஒரு கட்டத்தில் இனி பேசி எந்த பிரயோசனமும் இல்லை என்ற சூழல் ஏற்பட்டது. ஆனால், ஒரே வருடத்தில் எனது முழு திறமையையும் காண எனது பெற்றோருக்கு ஒரு வாய்ப்பை பெற்றுக் கொடுத்தேன்.
க குறுகிய காலகட்டத்தில் பல வகையான நடனங்களை நெளிவு, சுளிவுகளுடன் ஆட கற்றுக் கொண்டேன். பலருக்கும் இது வியப்பை அளித்தது. ஒரு பெண்ணால் கூட இப்படி நடனம் ஆட முடியாது,
இவன் எப்படி ஆடுகிறான் என்று வாய் பிளந்து பார்த்தனர். அவர்களது வியப்பு, பள்ளி ஆண்டு விழாவில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பெண் வேடம் ஏற்று நடனம் ஆடும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது.
ஆண்டு விழாவில் எனது நடனத்தை, நாடகத்தை பார்க்க எனது பெற்றோரும் வருகை புரிந்தனர். எனது நடிப்பையும், நடனத்தையும் கண்டு…நாடகத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் பார்வையாளர்கள் சிலர் கைத்தட்டி அழுதனர்.
இதை கண்ட பிறகே என் பெற்றோருக்கு எனது திறமை மீது பெரிய நம்பிக்கை வந்தது. அதன் பிறகு, நான் பெண் போல வேடமிட்டு வீட்டுக்குள் சுதந்திரமாக ஆடிப்பாட அனுமதியும் கிடைத்தது.
அதன் பிறகு தொடர்ந்து நான் பல விழாக்களில், மேடைகளில் எனது நடன திறமையை வெளிப்படுத்தினேன். வெறும் நடனமாக மட்டும் இல்லாமல், நடிப்பும் பல வித முக பாவனையும் வெளிப்படுத்துவது எனது தனித்தன்மையாக இருந்தது.
இதன் காரணமாக பல வாய்ப்புகள் என்னை தேடி வந்தன. என் பெற்றோரும் என்னை கண்டு மிகவும் பூரிப்பு அடைந்தனர். ஆனால், நான் அதன் அடுத்தக் கட்டத்திற்கு சென்றேன்.
ஆண்கள் பெண்களை கண்டு ஏக்கத்துடன் பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னையும் அவர்கள் ஏக்கத்துடன் காண வேண்டும் என்ற ஆசை என்னுள் ஆழமாக பதிந்தது.
ஆனால், இதை எப்படி வெளிபடுத்த முடியும். விழா மேடை மற்றும் வீட்டுக்குள் தவிர வேறு எங்கும் என்னால் புடவை அணிந்து வெளியேற முடியாதே. ஆனால், நாளுக்கு நாள் அந்த ஆசை என் மனதின் ஆழத்தை அடைந்தது. அது என்னுள் ஒரு புதுவிதமான உணர்ச்சி மற்றும் வலியை ஏற்படுத்தியது.
அப்போது தான் திருமணம் ஊர்வலத்தில், வைபவத்தில் பெண்கள் சிலர் ஆடுவதையும், அதை ஆண்கள் ஏக்கத்துடன், ஆசையுடனும் காண்பதையும் நான் கண்டேன்.
அப்போது தான் முடிவு செய்தேன். நான் அதை முயற்சிக்க வேண்டும் என்று. ஆனால், எத்தனையோ திருமணம் விழா ஏற்பாடு அமைப்புகளை அணுகியும் எனக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.
ஓர் ஆண் பெண்ணாக வேடமிட்டு ஆடுவது ஏமாற்றுவது போல. அதை நாங்கள் செய்ய மாட்டோம் என்று கூறினார்கள். மேலும், இது அவர்களுக்கு அவப்பெயர் பெற்று தரும் என்று கருதினர்.
கடைசியாக ஒரு நிறுவனத்திடம் நான் இலவசமாக நடனமாடி தருகிறேன் என்று வாய்ப்பு பெற்றேன். எனது நடனம் திருமணத்திற்கு வந்த அனைவரையும் மகிழ்வித்தது.
அந்த திருமண விழா அமைப்பு நிறுவன மேலாளர் என்னை அழைத்து பாராட்டியது மட்டுமின்றி, தொடர்ந்து எனக்கு வாய்ப்புகள் அளிப்பதாகவும் கூறினார். தொடர்ந்து பகலில் ஒரு வாழ்க்கையும், இரவில் ஒரு வாழ்க்கையும் வாழ ஆரம்பித்தேன்.
ஆனால், எனது இந்த இரவு பகல் ஆட்டம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஒரு நாள் திருமண விழாவில் ஆடி முடித்து வீடு திரும்பும் போது, தங்கள் ஆசையை அடக்கிக் கொள்ள முடியாத மூன்று ஆண் வெறியர்களிடம் மாட்டிக் கொண்டேன்.
நான் எத்தனயோ கெஞ்சியும், அவர்கள் என்னை விடுவதாக இல்லை. என் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்திய பிறகே… நான் ஓர் ஆண் என்பதை அறிந்து… என்னை சாலையில் விட்டு சென்றனர்.
ஒரு பெண்ணின் வலி என்ன என்பதை அந்த நிகழ்வு எனக்கு உணர்த்தியது. நான் ஒரு பெண் தான் என்பதையும் அப்போது தான் நான் புரிந்துக் கொண்டேன். வீட்டுக்கு செல்லும் வரை என் கண்களில் ஈரம் காயவில்லை. அப்போது தான் முடிவு செய்தேன்.
இனிமேல், எனது ஆடை புடவை தான் என்று. ஆனால், இதை பெற்றோரும், சமூகமும் ஏற்காது என்று அறிந்தேன். ஆகையால் இனிமேலும், வீட்டில் இருந்து பயனில்லை என்று மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டேன்.
அன்று அம்மா வீட்டில் தான் இருந்தால். முழுமையாக மேக்கப் செய்து கொண்டு, எனது பொருட்களை எல்லாம் பேக்கப் செய்து வைத்தேன். அவள் புதியதாக வாங்கி வைத்திருந்த லிப்ஸ்டிக் ஒன்றை எடுத்து இதழில் தீட்டிக் கொண்டிருந்த போது அம்மா வந்துவிட்டால். ”
டேய் அது புதுசுடா.. நானே இன்னும் யூஸ் பண்ணல…” என்று அதட்டினாள். “அதனால என்ன, வர வாரம் என் காலேஜ்ல ஒரு டிராமா இருக்கு. அதுல் நான் தான் லீட் ரோல் பண்றேன்.
ஒரு ஹிஸ்டாரிக்கல் கேரக்டர். அதுக்கு இப்ப இருந்தே ட்ரெயின் ஆகணும். நான் இப்பவே காலேஜ் கிளம்புறேன்…” என்று கூறி, அம்மாவின் புடவையுடன் வீட்டில் இருந்து வெளியேறினேன்.
அதன் பிறகு, நான் இன்னும் வீடு திரும்பவில்லை. எனது பாதை என்ன, பயணம் என்ன என்று தெரிந்த பிறகு… பிறரை காயப்படுத்தி வாழ்வதற்கு பதிலாக புரிந்து வந்துவிடுவது தான் சரி என்று தோன்றியது.