கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்க அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது.
வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தினார்.
தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா நேசக்கரம் நீட்டியதும், வாஷிங்டனையும் மிரட்டும் விதத்தில் அணுகுண்டு சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன சோதனைகளை நடத்தினார்.
மேலும் கிம் ஜாங் அன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சீண்டும் விதமாக பேசி வந்தார். இதனால் எரிச்சல் அடைந்த அமெரிக்கா, கொரிய தீபகற்பத்தில் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அனுப்பி அப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகிறது. தென் கொரியாவுக்கு போர் பயிற்சியும் அளிக்கிறது.
இதைத் தொடர்ந்து இப்பகுதியில் கடந்த ஒரு வருடமாக போர் பதற்றம் நீடித்து வருகிறது.ஆனால், சமீபகாலமாக கிம் ஜாங் அன்னின் போக்கு மாறத் தொடங்கி இருப்பதாகவும், அமெரிக்காவுடன் நட்புறவு மேற்கொள்ள விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஐ.நா. விதித்த பல்வேறு பொருளாதார தடைகள் காரணமாக வடகொரியா இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கருதப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தென்கொரியா, வடகொரியா அணிகள் ஒரே கொடியின் கீழ் ஒரே அணியாக பங்கேற்றதை கூறுகின்றனர்.
இந்த ஒலிம்பிக் போட்டியின் நிறைவு நாள் விழா நேற்று முன்தினம் நடந்தது. அதில் 2010-ம் ஆண்டு 50 தென்கொரியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் என்று கூறப்படும் வடகொரிய தூதர் கிம் யோங் சோல் கலந்து கொண்டு வியப்பை ஏற்படுத்தினார்.
இது அமெரிக்காவுடன், வடகொரியா நேசக்கரம் நீட்ட விரும்புவதையே காட்டுகிறது என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவின்போது சிறப்பு விருந்தினர்களுக்கான பகுதியில் கிம் யோங் சோல், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவாங்கா மற்றும் கொரிய தீபகற்பத்துக்கான அமெரிக்க இராணுவ தளபதி வின்சென்ட் புரூக்ஸ் ஆகியோரின் அருகில் அமர்ந்திருந்ததும், விழாவில் தென்கொரியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அவர் எழுந்து நின்று மரியாதை செய்ததும் இதற்கு உதாரணமாக காட்டப்படுகிறது.
வடகொரிய தூதர் கிம் யோங் சோல் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவுக்கு முன்னதாக தென்கொரிய அதிபர் ‘மூன் ஜே-இன்’னையும் சந்தித்து பேசினார்.
அப்போது கிம் யோங் சோல், வடகொரிய தலைவர் அமெரிக்காவுடன் நட்புறவை மேம்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும், இதற்காக தாராளமாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதற்கு மூன் ஜே-இன் அமெரிக்காவும், வடகொரியாவும் கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி அடிப்படைப்பூர்வமாக தீர்வு காண வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.
ஏற்கனவே தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்னை வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தனது நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள நிலையில் வடகொரிய தூதர் கிம் யோங் சோல் மூலம் தற்போது அடுத்தகட்ட முயற்சியை வடகொரியா மேற்கொண்டிருப்பது அரிதானதொரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இதனால் அமெரிக்கா-வடகொரியா இடையே கொரிய தீபகற்பத்தில் நிலவும் போர் பதற்றம் விரைவில் தணியும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகி உள்ளது.
இதற்கிடையே வடகொரிய தூதர் கிம் யோங் சோலை தென்கொரியாவுக்கு வர அனுமதித்ததை கண்டித்து 200-க்கும் மேற்பட்டோர் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா நடந்த மைதானத்தின் வெளியே திரண்டு தென்கொரிய-அமெரிக்க கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது 50 பேரின் படுகொலைக்கு காரணமான கிம் ஜோங் சோலை நரகத்துக்கு அனுப்பு என்று அவர்கள் கோஷமிட்டனர்.