சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டாவில், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா நீட்டித்துள்ளது. விமான தாக்குதல்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக செய்திகள் வரும் நிலையில், ஐ.நா இந்த கோரிக்கையை நீட்டித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கடந்த சனிக்கிழமை சிரியாவில் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது.
ஆனால் சிரிய அரசின் கூட்டாளியான ரஷ்யா, எவ்வாறு இதனை அமலுக்கு கொண்டு வருவது என் ஒப்புக் கொண்ட பின்னரே இந்த அறிவிப்பை செயல்படுத்த முடியும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், போர் அதிகரித்த எட்டு நாட்களில், சிரிய அரசின் விமான தாக்குதலால் சுமார் 541 பேர் கொல்லப்பட்டதாக தொண்டு நிறுவனம் ஒன்று கூறுகிறது.
சிரியாவின் தலைநகர் டாமஸ்கஸுக்கு அருகே உள்ள கிழக்கு கூட்டா பிராந்தியம்தான் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள கடைசி மிக முக்கிய பிராந்தியமாகும்.
கிழக்கு கூட்டாவில் என்ன நடக்கிறது?
3 லட்சத்து 93 ஆயிரம் பேர் சிக்கியுள்ள ஓரிடத்தில், பீரங்கி குண்டுகள் வீசப்பட்டன.
டூமாவில் ஒரு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் உயிரிழந்ததாக சிரிய சிவில் பாதுகாப்பு பிரிவு ஒன்று தெரிவித்துள்ளது. உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பாதுகாப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, அரசு நடத்திய விமான தாக்குதல்களில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ பராமரிப்பு மற்றும் நிவாரண அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்தது.
ஐ.நா என்ன கூறுகிறது?
ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஐ.நா செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ், “பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை திறம்பட செயல்படுத்தினால் மட்டுமே அவை அர்த்தமுள்ளவையாக இருக்கும் என்றும், அதனால்தான் இந்த தீர்மானங்களை உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும்” கூறினார்.
மேலும், “கிழக்கு கூட்டாவால் இதற்கு மேல் காத்திருக்க முடியாது. பூமியில் இருக்கும் நரகத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்.
“எவ்வித தாமதமுமின்றி” 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை உடனடியாக அமல்படுத்தி அதனை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் வலியுறுத்தியது.
கிழக்கு கூட்டாவின் மோசமான நிலை
மருத்துவர்கள் “மின்சாரம், மாத்திரைகள், ஆக்சிஜன், மயக்க மருந்து, வலி நிவாரணிகள், ஆன்டி பயாடிக்ஸ் போன்ற எதுவுமே இல்லாமல் பணியாற்றி வருவதாக” ஜாட் என்ற மருத்துவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
மேலும், அவர்கள் உண்மையிலேயே மிகவும் பயங்கரமான, கடினமான சூழலில் பணிபுரிந்து வருகின்றனர்; முதல் உலகப் போரை இது நினைவு படுத்துகிறது” என்றார் அவர்.
சிரியாவின் அரசு படைகள் மற்றும் அதன் கூட்டாளிகள் நடத்திய தாக்குதல்களில் 2011ஆம் ஆண்டில் இருந்து 12 ஆயிரத்து 763 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவில் மனித உரிமைகளுக்கான குழு தெரிவித்துள்ளது.
குளோரின் தாக்குதல் நடைபெற்றதா?
அல்-ஷிஃபுனியா என்ற நகரத்தில் நடந்த விமான தாக்குதலுக்கு பிறகு, அங்கு குளோரின் வாடை வீசியதாக ஓட்டுனர்கள் கூறினர்.
குளோரின் வாயு தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் அறிகுறிகள், சில நோயாளிகளிடம் தென்பட்டதாக எதிர்தரப்பு நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் பணியாளர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட 18 பேருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டதாகவும், ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 மாத குழந்தை ஒன்று வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், அந்த சிறுவனின் மரணத்திற்கு காரணம் அவன் சுவாசித்த குளோரினா அல்லது குண்டுவெடிப்பா என்ற தெளிவு ஏற்படவில்லை.
ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என சிரிய அரசாங்கம் கூறி வருகிறது.
எனினும், 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதியன்று வட-மேற்கு நகரமான கான் ஷேக்ஹூன் நகரத்தில் நிகழ்ந்த கொடிய ரசாயன தாக்குதலுக்கு சிரிய அரசாங்கம்தான் காரணம் என கடந்த அக்டோபரில் ஐ.நா முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.