செப்டம்பர் 11, தாக்குதல் நடந்த நாளில் இருந்தே, ஏன் அந்தச் சம்பவத்தின் அடுத்த நொடியிலிருந்து அமெரிக்கா மற்றும் வெள்ளை மாளிகை முழுவதும் ஏதோ மாநாடு, கருத்தரங்குகள் நடக்கும் இடம்போல பரபரப்புடன் காட்சியளிக்கத் தொடங்கியது.
எங்கு பார்த்தாலும் மீட்டிங்குகளால் வெள்ளைமாளிகை முழுவதும் நிறைந்து காணப்பட்டது.
ஆனால், அவர்கள் வார்த்தைகளில் ஒன்று பிரதானமாக இருந்தது. எல்லோரும் சொல்வதை அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
அப்போதே முடிவு செய்துவிட்டார் புஷ். ”ஆப்கான் போர்” என்ற விஷயத்தை மையமாக வைத்து வாதங்கள் வலுக்கத் தொடங்கின.
ஆப்கானிஸ்தானை தரைமட்டமாக்குவது என்பது தொடங்கி பின்லேடன் தலைக்கு விலை அறிவிக்கப்பட்டதுவரை, எல்லாவற்றையும் பேசிய அமெரிக்க அதிகாரிகளில் ஒருவரின் குரல் மட்டும் சற்றே மாறி ஒலித்தது.
உள்துறை செயலர் காலின் பாவெல் சொல்வதை மட்டும் உற்றுக் கவனித்தார் புஷ். காலின் பாவெல், “இந்தப் போரை அல்-கொய்தா மற்றும் பின்லேடனுக்கு எதிரான போராக முன்னிறுத்த வேண்டாம்.
ஒட்டுமொத்த தீவிரவாதத்துக்கு எதிரான போராக அறிவிப்போம். அப்போதுதான் சர்வதேச அளவில் நமக்கு உதவிகள் கிடைக்கும். ஆனால், இந்தப் போரை ஆப்கானிலிருந்து தொடங்குவோம் என அறிவிப்போம்” என்று சாணக்கிய ஐடியாவை சொன்னார். மேலும், அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தானிடம் ஆதரவு கோர வேண்டும் என்றார் அவர்.
அங்கிருந்தவர்கள், ‘பாகிஸ்தானா…, இதற்கு எப்படி அந்நாடு சம்மதிக்கும்?’ என்று எதிர்கேள்வி கேட்க, அடுத்த கணமே பாவெல், சினிமாக்களில் வரும் வில்லன்போல தன் திட்டத்தை விளக்கினார்.
“முஷாரஃப் ஒன்றும் மத விஷயங்களுக்குச் செவி சாய்ப்பவராகத் தெரியவில்லை. தாலிபான்கள் மதவாத அரசுகளுடன் நட்பு பாராட்டுகிறது.
இதுதான் சமயம், முஷாரஃப்பிடம் கோரிக்கையாக இல்லாமல் கட்டளையாக அணுகிப் பார்ப்போம். சம்மதித்தால் ஆப்கான் மட்டும் எதிரி. மறுத்தால் பாகிஸ்தானையும் சேர்த்து இரண்டு எதிரி” என்றார்.
முதல் பந்தை வீச வரும் பந்துவீச்சாளர் அம்பயரிடமிருந்து ”ப்ளே” என்ற வார்த்தைக்காகக் காத்திருப்பதுபோல, போர் என புஷ் சொல்வதற்காகக் காத்திருந்தனர் அமெரிக்க அதிகாரிகள்.
பாகிஸ்தான் உதவியைக் கோர சம்மதித்தார் புஷ். நிபந்தனைகளோடு பாகிஸ்தானை அணுகியது அமெரிக்கா. அதில் முக்கியமான நிபந்தனை, “ஆப்கானிஸ்தானுடன் அரசு உறவுகளைத் துண்டிக்க வேண்டும், அமெரிக்கப் போருக்கு நேரடி ஆதரவு தர வேண்டும்” என்பதுதான்.
‘கண்டிப்பாக இதை முஷாரஃப் மறுப்பார்’ என்று அனைவரும் நினைத்திருந்த நேரத்தில், “பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு ஆதரவு தரும். 9/11 தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கிறது பாகிஸ்தான்” என்றார். இதை அமெரிக்க அதிபர் புஷ் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதுதான் நிஜம்.
செப்டம்பர் 16…அமெரிக்கா போர் குறித்து, இறுதி முடிவு எடுக்கிறது. கூட்டணி நாடுகளுடன் இணைந்து தாக்குதல் நடத்த முடிவு செய்தது. போர் அறிவிப்பு என்னவோ, சர்வதேசப் பயங்கரவாதத்துக்கு எதிரானது என்ற பெயரில்தான்.
ஆனால், திட்டங்களில் எல்லாம் ஆப்கான், ஒசாமா பின்லேடன் என்றே இருந்தது. எஃப்.பி.ஐ இயக்குநர் முல்லர், அடிக்கடி குறுக்கிட்டு “இது சர்வதேச யுத்தம் என்றே சொல்லுங்கள்.
இல்லையென்றால் உள்நாட்டில் பிரச்னை ஏற்படும்” என்று எச்சரித்த வண்ணம் இருந்தார். போருக்கான தீர்மானம் தயாரானது. அமெரிக்க சாணக்கியத்தனத்தின் உச்சமாக முதல் வரியே ”இது அமெரிக்காவுக்கும், ஆப்கானுக்குமான யுத்தம் இல்லை.
தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தம்” என்று ஆரம்பித்தது. கூட்டணி நாடுகளுடனான ஒப்பந்தம், செலவு என எல்லாவற்றையும் உள்ளடக்கிய தீர்மானத்தைக் கொண்டுவந்தது அமெரிக்கா.
செப்டம்பர் 11ம் தேதி தாக்குதல் நடந்தது, 16-ம் தேதி போருக்கான முடிவெடுக்கப்பட்டது. அக்டோபர் 7-ம் தேதி, அதிபர் புஷ் ‘போர் தொடங்கியது’ என்று கூறி முடிப்பதற்குள், காபூல் நகரில் முதல் குண்டு விழுந்தது. மின்சாரம் தடைபட்டது.
ஆப்கான் அழியத் தொடங்கியது. விமானங்களிலிருந்து குண்டுகள் மழைபோல பொழியத் தொடங்கின. மக்கள், கொத்துக் கொத்தாக மடிந்தனர். ஒசாமாவுக்காக ஆப்கானை காவு வாங்கிக் கொண்டிருந்தது அமெரிக்கா.
முஷாரஃப் சம்மதிக்காவிட்டால் பாகிஸ்தானையும் சேர்த்து சூறையாடலாம் என எப்படி ‘ப்ளான் B’ வைத்து அமெரிக்கா களமிறங்கியதோ, அப்படிப்பட்ட ப்ளான் B அல்கொய்தாவிடமுமிருந்தது.
ஊருக்குள் புகுந்து சூறையாடும் அமெரிக்காவை திசைதிருப்ப ஆப்கானிலிருந்து தாலிபான் தலைவர் முல்லாவும், ஒசாமாவும் சிறு விமானம் மூலம் தப்பித்துச் சென்றுவிட்டதாக ஒரு செய்தி வெளியானது.
ஆனால், அந்தச் செய்தியைக் கிளப்பிவிட்டதே அல்கொய்தாவும், ஒசாமாவும்தான். இப்படிச் செய்தால் ‘அமெரிக்கப் படைகள் திசை திருப்பப்படும்’ என எதிர்பார்த்தனர்.
ஆனால், அமெரிக்கா அசரவில்லை. ‘நீ படிச்ச ஸ்கூலுக்கு நா ஹெட் மாஸ்டர்’ என்பதுபோல சி.ஐ.ஏ தகவல் தந்தது. ‘ஆப்கான் முழுமையாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
எங்கள் கவனத்திலிருந்து தப்பித்து, ஆப்கான் வான் எல்லையைத் தாண்டி ஒரு பறவைகூட செல்ல முடியாது’ என்று கொக்கரித்தார் புஷ். ஆப்கானில் ருத்ர தாண்டவம் ஆடின அமெரிக்கப் படைகள்.
ரஷ்யப் போரின்போது வீடுகளில் நிலவரைகள் கட்டப்பட்டன. ஆனால், அதற்குள்ளும் நீண்ட நாள்கள் மக்களால் தங்க முடியவில்லை. ஆப்கான் மக்களை மோசமாக நடத்தியது அமெரிக்கா.
பசியாலும், தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்தது. ஆப்கான் தரை மட்டமாகத் தொடங்கியது. ஒசாமாவை விட்டுவிட்டு ஆப்கான் வேட்டையை பிரதானமாக செய்து கொண்டிருந்தது அமெரிக்கா.
இதற்கிடையில் ஒரு பகுதியில் விலங்குகள் நூற்றுக்கணக்கில் செத்துக்கிடந்தன. இதனை மோப்பம் பிடித்த அமெரிக்காவுக்கு ஒன்றும் புரியவில்லை.
விசாரித்து உண்மை தெரிந்ததும் உறைந்துபோய் நின்றது அமெரிக்கா.. என்ன செய்யப்போகின்றன. இந்த இறந்த விலங்குகள்… ஒசாமாவின் திட்டம் என்ன? அடுத்த பாகத்தில் பார்ப்போம்…
தொடரும்…