சென்னை: பாத்டப்பில் ஏற்கெனவே தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. நடிகர் மோஹித் மார்வாவின் திருமண விழாவில் கலந்து கொள்ள கணவர் போனி கபூர், இளைய மகள் குஷி ஆகியோருடன் துபாய் சென்றிருந்தார் ஸ்ரீதேவி.
இவர் அங்குள்ள ஜூமைரா எமிரேட்ஸ் டவர் ஹோட்டலில் தங்கியிருந்தார். திருமணம் முடிந்தவுடன் போனி கபூர் மட்டும் மும்பை திரும்பினார்.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை போனி கபூர் சர்பிரைஸாக மீண்டும் துபாய் சென்று ஸ்ரீதேவி முன் நின்றிருக்கிறார். அப்போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார் ஸ்ரீதேவி.
இதைத் தொடர்ந்து இரவு விருந்துக்கு வெளியே செல்லவிருந்த நேரத்தில் குளியல் அறைக்கு சென்ற ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.
ஸ்ரீதேவிக்கு உடற்கூறாய்வு சோதனை நேற்றிரவு நிறைவடைந்தது. அந்த அறிக்கை தகவல்கள் இன்று வெளியாகியுள்ளன.அதில் ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. குற்றவியல் நோக்கமும் இல்லை.
அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
அவர் பாத்டப்பில் உள்ள நீரில் மூழ்கியே உயிரிழந்தார் என்று அறிக்கை கூறுகிறது. பொதுவாக இதுபோன்ற பாத்டப்களில் குளிக்கும்போதுதான் தண்ணீர் நிரப்புவது வழக்கம். ஆனால் இவர் முகம் கழுவ சென்றதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இதனால் அந்த டப்பில் நிலைத்தடுமாறி விழுந்தவுடன் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் எப்படி நிரம்பியிருந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த டப்பில் குளிப்பவர்கள் முக்கால்வாசி தண்ணீர் நிரப்பியே குளிப்பர். ஆயினும் முகம் கழுவ வந்த ஸ்ரீதேவி பாத்டப்பில் எப்படி விழுந்தார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்விகளாக உள்ளது.