ஸ்ரீதேவியால் தான் உயிர் வாழ்கிறேன்: ஹரிஷ்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியால் தான் உயிர் வாழ்ந்து வருகிறேன் என பாலியல் வன்கொடுமையில் சிக்கி மீண்டு வந்த ஹரிஷ் மிக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஸ்ரீதேவி(54) கடந்த சனிக்கிழமை இரவு மறைந்தார்.

முதலில் மாரடைப்பு தான் காரணம் என அவரது குடும்பத்தார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மது போதையில் தவறுதலாக நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குழந்தை பருவத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி தற்போது மீண்டு வந்து சமூக சேவைகளை செய்து வரும் ஹரிஷ் ஐயர் ஒரு உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார்.

அதாவது கடந்த 2012-ஆம் ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஆமீர்கான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் ஹரிஷ் கலந்துகொண்ட போது, ஸ்ரீதேவி அளித்த இன்ப அதிர்ச்சி குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும், தான் வாழ்வதற்கு ஸ்ரீதேவியும் அவர் அளித்த அந்த மன உறுதியும் தான் காரணம் என ஹரிஷ் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி, தான் உயிருக்கு உயிராக நேசிக்கும் ஸ்ரீதேவிக்கு என் பெயரை தெரிய வைத்த ஆமீர்கான் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியையும் ஹரிஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.