குடல் புழுக்களை அழிக்க சில இயற்கை மருத்துவம்!

குடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது… குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடும். குடல் புழுக்களை குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நீக்க வேண்டியது அவசியமாகும். குடல் புழுக்கள் வயிற்றில் வளர தொடங்கினால் குறைந்தது ஆறு மாதங்கள் வரையாவது வளரும் தன்மை கொண்டது.

குடல் புழுக்களை குழந்தைகளுக்கு நீர்ம மருந்து கொடுப்பதாலும், பெரியவர்களுக்கு புழுவை நீக்கும் மாத்திரைகளை சாப்பிடுவதாலும் நீக்க முடியும். ஆனால் இது போன்ற மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவது கூடாது. இதனை சாப்பிடும் போது மருத்துவர் பரிந்துரை என்பது மிகவும் அவசியமாகிறது. அதுமட்டுமின்றி இது போன்ற மாத்திரைகள் கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுவது இல்லை.

குடல் புழுக்கள் வந்த உடன் அழிப்பதற்கு பதிலாக அவை வயிற்றில் சேராமல் பாதுக்காத்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது. குடல் புழுக்களை அழிக்க சில இயற்கையான காய்கறிகளும், இயற்கை மருந்துகளும் உள்ளன. உடலுக்கு எந்த விதமான தீங்கும் இன்றி குடல் புழுக்களை நீக்கிவிடும் தன்மை கொண்டது. இந்த பகுதியில் குடற்புழுக்கள் எதனால் உண்டாகின்றன, அவை வராமல் பாதுகாக்க என்னென்ன வழிகள் உள்ளன.. அவற்றை போக்க உதவும் வைத்தியங்கள் பற்றியும் விரிவாக காணலாம்.

குடல் புழுக்கள் வர காரணம்

அசுத்தமான சுற்றுப்புறம்தான் குடல்புழுத் தொல்லைக்கு அடிப்படைக் காரணம். குறிப்பாக, தெருவோரங்களைத் திறந்தவெளிக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் தொல்லை அடிக்கடி வருகிறது. அசுத்தமான தெருவில், மண் தரையில், தண்ணீரில் குழந்தைகள் விளையாடுவது, அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடுவது, காலில் செருப்பு அணியாமல் நடப்பது, உணவு சாப்பிடுவதற்கு முன்னால் கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்தத் தவறுவது ஆகியவை குடல்புழு ஏற்படுவதற்குத் துணைபோகின்றன.

குழந்தைகளுக்கு?

சுத்தமில்லாத குடிநீர், சுகாதாரமற்ற உணவு மூலமும் இது ஏற்படுகிறது. குழந்தைக்கு மண் உண்ணும் பழக்கம் இருந்தால் குடலில் புழு வளர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சமையலுக்கு முன்பு காய்கறிகளைக் கழுவிச் சுத்தம் செய்யத் தவறினாலும், குடல்புழுத் தொல்லை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

கழிப்பறை சுத்தம்

சுயசுத்தம் காக்கப்பட வேண்டும். சுற்றுப்புறச் சுகாதாரம் மேம்பட வேண்டும். குளிப்பறை மற்றும் கழிப்பறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். திறந்தவெளிகளையும் தெருவோரங்களையும் கழிப்பறைகளாகப் பயன்படுத்தக் கூடாது. கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் கைகளைச் சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். குழந்தைகளையும் இவ்வாறு செய்வதற்குப் பழக்கப்படுத்துங்கள்.

சுத்தம்

சகதி, சேறு உள்ள அசுத்தமான இடங்களில் குழந்தைகளை விளையாடவிடக் கூடாது. சுத்தமான இடங்களில் விளையாடுவதை ஊக்கப்படுத்துங்கள். நகங்களைப் பத்து நாட்களுக்கு ஒருமுறை வெட்டிவிட வேண்டும். குழந்தைகள் விரல் சூப்பக் கூடாது.

உள்ளாடைகள்

குழந்தை ஈரப்படுத்திய உள்ளாடைகளை உடனுக்குடன் மாற்றுவதும், தினந்தோறும் மாற்ற வேண்டியதும், சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம். எக்காரணத்துக்காகவும் உள்ளாடைகளை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.

உணவு சுகாதாரம்

ஈக்கள் மொய்த்த பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. காரணம், மலத்திலுள்ள புழுக்களின் முட்டைகளைக் குடிநீருக்கோ, உணவுக்கோ கொண்டுவருவதில் ஈக்களுக்குப் பெரும்பங்கு உண்டு. சாலையோரக் கடைகளில் எதையும் வாங்கிச் சாப்பிடக் கூடாது.

நீரில் கழுவவும்

காய், கனிகளை உண்பதற்கோ சமைப்பதற்கோ பயன்படுத்தும் முன்பு தண்ணீரில் நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். இதனால் நீங்கள் சமைக்கும், சாப்பிடும் உணவுகள் சுத்தமாகவும் நச்சுக்கள் இன்றியும் இருக்கும்.

சுத்தமான நீர்

நன்றாகக் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட உணவு வகைகளையே உண்ண வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டியது அவசியம்.

வெளியில் செல்லும் போது..

காலில் செருப்பு அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டும். அசுத்தமான குளம், குட்டை, ஏரி, நீச்சல்குளம் போன்றவற்றில் குளிப்பதையும் நீச்சலடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

புண்கள் இருந்தால்..

வீட்டுக்குள் நுழைந்ததும் பாதங்களை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்த வேண்டும். பித்த வெடிப்பு, சேற்றுப்புண் இருந்தால் உடனே சிகிச்சை பெற்றுவிட வேண்டும்.

இறைச்சிகள்

தரமான கடைகளில் மட்டுமே இறைச்சியை வாங்க வேண்டும். மீன், இறைச்சி போன்றவற்றை நன்றாக வேகவைத்த பின் சாப்பிட வேண்டும்.

செல்லபிராணிகள்

வீட்டில் வளர்க்கப்படும் நாயாக இருந்தாலும் அதைத் தூக்கி கொஞ்சினாலோ, விளையாடினாலோ கண்டிப்பாகக் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

பூண்டு

பூண்டுடை பயன்படுத்தி குடலில் உள்ள புழுக்களை வெளியேற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளக்கெண்ணெய், மஞ்சள், பூண்டு. ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய்யில் பூண்டுகளை துண்டுகளாக்கி போட்டு வதக்கவும். இதில் கால் ஸ்பூன் மஞ்சள் சேர்க்கவும். இதை இருவேளை சாப்பிடும்போது குடல் புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். செரிமானம் சீராகும். 5 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்த கூடாது.

பூசணி விதை

பூசணி விதையை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பூசணி விதை, தேன். அரை ஸ்பூன் அளவுக்கு பூசணி விதை பொடி எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து இரவு தூங்கப்போகும் முன்பு சாப்பிட்டு வந்தால் குடல் புழுக்கள் வெளியேறும். பெரியவர்களுக்கு அரை ஸ்பூன் பூசணி விதை பொடியும், குழந்தைகளுக்கு கால் ஸ்பூன் அளவுக்கும் எடுக்கவும். இதை 3 நாட்கள் சாப்பிடலாம். 6 மாதத்துக்கு ஒருமுறை எடுத்துக்கொள்வது நன்மை தரும்.

பப்பாளி விதை

பப்பாளி விதையை பயன்படுத்தி குடல் புழுக்களை வெளியேற்றும் மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் பப்பாளி விதை எடுக்கவும். சிறியவர்களுக்கு என்றால் அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதில் தேவையான அளவு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி தேன் சேர்த்து வாரம் ஒரு முறை என 4 வாரங்கள் குடித்துவர வயிற்று புழுக்கள் வெளியேறும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வேப்பம் பூவை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் நெய் காய்ந்ததும் வேப்பம் பூவை சேர்த்து வதக்கவும். இதில், நீர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கடி மாதம் ஒருறை குடித்துவர குடலில் புழுக்கள் வராமல் இருக்கும்.

வேப்பம் பூ

வேப்பம் பூவை முன்னோர்கள் வாரத்துக்கு ஒருமுறை உணவில் சேர்த்தார்கள். இதனால் குடல் புழுக்கள், தொற்று கிருமிகள் வராமல் தடுக்கப்பட்டது. வேப்பம் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. வேப்பம் பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் ஆரோக்கியம் கிடைக்கும். தரமற்ற, அதிகளவில் உணவை சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்றுவலியை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இஞ்சியை சாறாக்கி தொப்புளில் 5 சொட்டுக்கள் விட்டு, தொப்புளை சுற்றி தடவுவதன் மூலம் வயிற்று வலி குணமாகும்.

கோவைக்காய்

கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். கோவை இலைச் சாறு, பித்தம், ஷயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும். கரம் மசாலா அல்லது உஷ்ணத்தைத் தரும் மருந்துகள் கோவைக்காயால் ஏற்படும் தீமைகளுக்கு நல்ல மாற்றாகும்.